Times of Puducherry
புதுச்சேரி முத்தியால்பேட்டை அருள்மிகு ஸ்ரீ லட்சுமி ஹயக்ரீவர் கோவிலில் விஜயதசமியை முன்னிட்டு நடைபெற்ற வித்யாரம்பம் நிகழ்ச்சியில் ஏராளமான பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை அழைத்து வந்து ‘அ’ எழுத வைத்து முதல் கல்வியை தொடங்கினார்கள்.
வித்யாரம்பம் என்பது குழந்தைகளின் முறையான கல்வியை அல்லது கற்றலைத் தொடங்குவதற்காகச் செய்யப்படும் ஒரு பாரம்பரிய முறையாகும். ‘வித்யா’ என்றால் அறிவு என்றும், ‘ஆரம்பம்’ என்றால் தொடக்கம் என்றும் பொருளாகும், நவராத்திரி திருவிழாவின் 10-ம் நாளான விஜயதசமி நன்னாளில் இந்த நிகழ்வு நடத்தப்படுகிறது.
குரு அல்லது குடும்பப் பெரியவர் முன்னிலையில், ஒரு தட்டில் பரப்பப்பட்டுள்ள நெல் மணியில் குழந்தையின் சுட்டுவிரல் பிடித்து ‘ஓம்’ அல்லது முதல் எழுத்து ‘அ’ எழுதப்படுகிறது. கல்வி மற்றும் ஞானத்தின் தெய்வமான சரஸ்வதி தேவியை வழிபட்டு இந்த நிகழ்வு தொடங்கப்படுகிறது. இசை, நடனம், மொழி மற்றும் கலை போன்ற அனைத்துவிதமான கல்வி மற்றும் அறிவு உலகிற்கு குழந்தையை அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்துவதே இதன் நோக்கமாகும்.
இவ்வளவு சிறப்பு மிக்க வித்யாரம்பம் நிகழ்வு புதுச்சேரி முத்தியால்பேட்டையில் அருள்மிகு லட்சுமி ஹயக்ரீவர் கோவிலில் நடைபெற்றது, இதில் புதுச்சேரியில் உள்ள பல்வேறு பகுதிகளில் இருந்து பெற்றோர்கள் தங்கள் குழந்தையை அழைத்து வந்து நெல்மணியில் அ எழுத வைத்து முதல் கல்வியை தொடங்கினார்கள்.
தொடர்ந்து அருள்மிகு லட்சுமி ஹயக்ரீவருக்கு சிறப்பு பூஜைகளும் நடைபெற்றது இதில் ஏராளமான பக்தர்களும் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.