Times of Puducherry
தமிழகத்தில் குத்தகை விவசாயிகளுக்கும் அடையாள அட்டை (கிரீன் கார்டு) வழங்க வேண்டும். காப்பீடு செய்வதை தடை செய்யக்கூடாது என தமிழக முதலமைச்சருக்கு பிஆர் பாண்டியன் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பிஆர் பாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
தமிழகத்தில் கோவில் அறக்கட்டளைகள் ஆதீனங்களுக்கு சொந்தமான நிலங்கள் குத்தகை உரிமை பெற்று விவசாயிகள் சாகுபடி செய்து வருகின்றனர். தமிழ்நாட்டில் 40 சதவீத நிலங்கள் குத்தகை விவசாயிகளுக்கு சொந்தமானதாக உள்ளது. கோவில் அறக்கட்டளைகள் ஆதீனங்களுக்கு என்ன உரிமை உள்ளதோ, அதே சம உரிமை குத்தகை விவசாயிகளுக்கும் வழங்கப்பட்டுள்ளது. விவசாயிகள் உழவு செய்து விளைவிக்கக் கூடிய வருவாயில் ஒரு பகுதியை குத்தகையாக செலுத்த வேண்டும். இதனை கொண்டு அனாதை இல்லங்கள், கோவில்கள், கல்லூரிகள், கல்விக்கூடங்கள், மருத்துவமனைகள் உள்ளிட்டவற்றை நிர்வகிக்க வேண்டும் என்ற அடிப்படையில் தமிழக அரசு குத்தகை விவசாயிகள் பாதுகாப்பு சட்டத்தை கொண்டு வந்து அமுல்படுத்தி வருகிறது.
விவசாயிகளும் வாழ வேண்டும், பொது சொத்துக்கள் என்கிற அடிப்படையில் அரசு பராமரிக்க வேண்டும் என மன்னர் ஆட்சி காலத்தில் இருந்து நடைமுறையில் உள்ளது. 2012 ஆம் ஆண்டு முதல் 2018 வரை ஏற்பட்ட வரலாறு காணாத வறட்சி மற்றும் புயல் வெள்ள பேரிடரால் பாதிக்கப்பட்ட ஆண்டுகளில் குத்தகை செலுத்த இயலாத நிலை ஏற்பட்டது. மாநில அளவில் பேரிடர் பாதித்த மாநிலமாக அறிவிக்கப்பட்டதோடு, பல மாவட்டங்கள் பேரிடர் பாதித்த மாவட்டங்களாக அறிவித்து அரசிதழில் வெளியிடப்பட்டு நிவாரணமும் வழங்கப்பட்டது. கடன் தள்ளுபடிகளும் தொடர்ந்து அறிவிக்கப்பட்டது.ஆனால் குத்தகை பாக்கியை அரசு ரத்து செய்யாமல் விட்டு விட்டது.
இதனை பயன்படுத்தி தமிழக அரசு வருவாய் நீதிமன்றங்கள் மூலம் குத்தகை விவசாயிகளுடைய குத்தகை பாக்கியை நிலுவை காட்டி நில வெளியேற்றம் செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. மேலும், விவசாயிகளின் குத்தகை பதிவை ரத்து செய்து கோவில் அறக்கட்டளை ஆதீனங்கள் சொத்துக்கள் என்கிற பெயரில் சட்டவிரோதமாக பதிவு செய்யப்பட்டது.
ஆனால் விவசாயிகள் தொடர்ந்து உழவு செய்து மகசூல் கிடைக்கும் ஆண்டுகளுக்கு குத்தகை செலுத்தி வருகின்றனர்.இந்நிலையில், கடந்த 2022-ல் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் கோவில் சொத்துக்கள் அபகரிப்பதை தடுப்பதற்காக வழக்கு தொடரப்பட்டது. கோவில் சொத்துக்களை வெளிப்படையாக இணையதளத்தில் பதிவேற்றம் செய்திட வேண்டும் என நீதியரசர்கள் தீர்ப்பு வழங்கினர். மேலும் கோவில் சொத்துக்கள் அபகரிப்பதை ஏற்க முடியாது, அவர்களை நில அபகரிப்பாளர்கள் என வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுத்து சொத்துக்களிலிருந்து வெளியேற்ற உத்தரவிட்டது. இதனை அடிப்படையாகக் கொண்டு கோவில் சொத்துக்கள் என்கிற பேரில் குத்தகை நிலங்களையும் இணையதளத்தில் தவறாக பதிவேற்றம் செய்து விவசாயிகள் உரிமை பறிக்கப்பட்டுள்ளது.
இதனை திமுக அரசு கொள்கை முடிவு எடுத்து குத்தகை விவசாயிகளின் நிலத்தை கோவில், அறக்கட்டளைகள், ஆதீனங்கள் சொத்து என்கிற பெயரில் விதிவிலக்களித்து குத்தகை விவசாயிகளுக்கு குத்தகை உரிமையை உறுதிப்படுத்த வேண்டும். இதனை நீதிமன்றத்திற்கு எடுத்துரைத்து விதிவிலக்கு பெற வலியுறுத்தினோம். ஆனால், திமுக அரசோ சுயநலத்திற்காக அதனை ஏற்க மறுத்து மறைமுகமாக கோவில் குத்தகை நிலங்கள் அனைத்தையும் ஏலம் விட்டு அதிகார வர்க்கம் அபகரிப்பதற்கு வழி வகுத்தனர்.
இதனை தற்போதைய தமிழக வெற்றிக்கழக அரசு கொள்கை முடிவு எடுத்து கோவில் சொத்துக்கள் என்கிற பெயரிலிருந்து விதிவிலக்கு வழங்கி மதுரை உயர்நீதி மன்றத்திற்கு எடுத்துரைத்து குத்தகை விவசாய நிலகளுக்கு விளக்கு பெறவேண்டும் என வலியுறுத்துகிறோம்.அதுவரையில் விவசாயிகள் குத்தகை சாகுபடி மேற்கொண்டு வரும் நிலையில், தற்போது மத்திய அரசு கிரீன் கார்டு (பச்சை அட்டை)வழங்குவதற்கு தகுதி இல்லை என மறுத்துள்ளனர். மேலும் காப்பீடு செய்வதற்கு சிட்டா அடங்கள் வழங்க மறுக்கப்பட்டு வருகிறது. உரங்கள் பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே, தமிழக அரசு குத்தகை விவசாயிகள் நிலங்களை சம்பந்தப்பட்ட வாரிசுதாரர்களுக்கு உரிய கிரீன் கார்டு வழங்கி காப்பீடு செய்வதற்கும், கூட்டுறவு கடன் பெறுவதற்கும் நெல்லை விற்பனை செய்வதற்கும்,உரம் பெறுவதற்கும் வழி வகுக்க வேண்டும் என தமிழக முதலமைச்சரை வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறோம் என அறிக்கையில் தெரிவித்துள்ளார். மேற்கண்டவாறு தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பிஆர் பாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.