Times of Puducherry
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் வளாகத்தில் பர்தா அணிந்த இஸ்லாமிய பெண் ஒருவர் வந்து சென்ற சம்பவம் குறித்து காவல்துறையினர் உடனடியாக விரிவான விசாரணை நடத்த வேண்டும் என இந்து தமிழர் கட்சியின் மாநிலத் தலைவர் ராம ரவிக்குமார் வலியுறுத்தியுள்ளார்.
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலின் முக்கியப் பகுதியான கருட மண்டபம் வரை இஸ்லாமிய அடையாள உடையான பர்தா அணிந்த பெண் ஒருவர் வந்து சென்றுள்ளார். கோவிலின் பாதுகாப்பு நடைமுறைகளை மீறி, பிற மத அடையாளத்துடன் வந்த நபரை உள்ளே அனுமதித்தது எப்படி எனக் கேள்வி எழுப்பியுள்ள ராம ரவிக்குமார், இச்சம்பவம் குறித்து கோவில் நிர்வாகமும், காவல்துறையும் உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
மேலும் அவர் தெரிவிக்கையில், இந்து மத கோவில்களில் பிற மத அடையாளங்களுடன் வருகை தருவது அவர்கள் இஸ்லாம் மத நம்பிக்கையின் அடிப்படையில் ஏற்புடையது அல்ல .
இந்து மத தெய்வங்களை நம்பாத, சிலை வணங்கிகள், காபிர்கள், ஷிர்க் வழிபாடு என்று சொல்லும் இஸ்லாமிய மத நம்பிக்கை ஏற்றுக் கொண்ட ஒரு பெண்மணி என்ன நோக்கத்திற்காக வந்து சென்றார் என்பது குறித்து விசாரிக்க வேண்டும்.
மாண்பமை நீதிமன்றம் பிற மதத்தவர்கள் இந்து மத கோவில்களில் வருவது குறித்து உரிய வழிமுறை வகுக்க வேண்டும் என்று தீர்ப்பு கொடுத்த வேளையில் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் இந்த சம்பவம் அரங்கேறி இருக்கிறது .
கேரள மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற திருக்கோவில்களில் பிற மதத்தினர் நுழைவதைக் கட்டுப்படுத்தும் கடுமையான விதிமுறைகள் அமலில் உள்ளன. அதே போன்று, தமிழ்நாட்டிலும் உள்ள இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் பாதுகாப்பு நடைமுறைகளை வலுப்படுத்தி, பிற மதத்தினரின் நுழைவைக் கட்டுப்படுத்தும் விதிகளைக் கடுமையாக அமல்படுத்த வேண்டும் என்றார்.
வைணவ ஸ்தலங்களில் முதன்மையான திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் பர்தா அணிந்த இளம் பெண் ஒருவர் கருட மண்டபம் வரை சென்ற சம்பவம் இந்துக்கள் மத்தியில் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.