Times of Puducherry

அர்னாப் புயலின் தாக்கம் ஏனாம் பிராந்தியத்தில் அதிகமாக இருக்கும் என எதிர்பார்ப்பு

எழுதியவர்: News contributor
1 நிமிட வாசிப்பு
26 Oct 2026 • 3:28 PM
impact-cyclone-arnab-expected-high-yanam

அர்னாப் புயலின் தாக்கம் ஏனாம் பிராந்தியத்தில் அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும், பாதிப்புகளைத் தவிர்ப்பதற்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வது தொடர்பாக அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் தலைமையில் அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

புதுச்சேரியிலிருந்து ஏனாம் சென்ற அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ், ஏனாம் பிராந்திய நிர்வாக அதிகாரி அலுவலகத்தில் மண்டல அதிகாரி சிவ்ராஜ் மீனா மற்றும் அனைத்துத் துறை அரசு அதிகாரிகளுடன் இந்த அவசரக் கூட்டத்தை நடத்தினார்.

அர்னாப் புயலின் தாக்கம் ஏனாம் பிராந்தியத்தில் அதிகமாக இருக்கும் என எதிர்பார்ப்பு

புயலின் தாக்கத்தால் ஏனாம் பகுதியில் கனமழை பெய்யும் பட்சத்தில், தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்குதல், குடியிருப்புப் பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படுதல் உள்ளிட்ட பாதிப்புகளைத் தடுப்பதற்குத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

மேலும், மழைநீர் தேங்கும் பகுதிகளைக் கண்டறிந்து, நீரை விரைவாக வெளியேற்றுவதற்கான ஏற்பாடுகளைச் செய்வது, மழைநீர் வடிகால்களைத் தூர்வாரி சீரமைப்பது, சாலைகளில் போக்குவரத்துப் பாதிப்பு ஏற்படாமல் கண்காணிப்பது, மின்சாரம் மற்றும் குடிநீர் விநியோகத்தில் தடங்கல் ஏற்படாமல் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வது போன்ற அம்சங்கள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசிக்கப்பட்டது.

அவசர காலங்களில் பொதுமக்களுக்கு உடனடியாக உதவிகளை வழங்குவதற்கும், பாதிப்புகள் ஏற்படும் பகுதிகளில் மீட்புப் பணிகளை விரைந்து மேற்கொள்வதற்கும் அனைத்துத் துறைகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டியதன் அவசியம் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

புயல் தொடர்பான வானிலை நிலவரங்களைத் தொடர்ந்து கண்காணித்து, அதற்கேற்ப முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வதுடன், பொதுமக்களின் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளித்து அதிகாரிகள் தயார் நிலையில் இருக்க வேண்டும் எனவும் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.அர்னாப் புயலை எதிர்கொள்ளும் வகையில் ஏனாம் பிராந்தியத்தில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் அனைத்துத் துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியது குறிப்பிடத்தக்கது.

NEWSLETTER & ALERTS

முக்கியச் செய்திகள் — உங்கள் கைபேசிக்கே

தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.

Scroll to Top