Times of Puducherry
கடந்த 16 ஆண்டுகளாக கட்டப்பட்டு வரும் உப்பனாறு வாய்க்கால் மழைக் காலங்களில் அடைப்பு ஏற்படுவதால் மக்களை திரட்டி போராட்டம் நடத்தப் போவதாக உருளையன்பேட்டை தொகுதி எம்எல்ஏ நேரு தெரிவித்துள்ளார்.
புதுச்சேரியில் இன்று அதிகாலை முதல் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக உப்பனாறு வாய்க்கால் முழுவதும் நிறைந்து மழை நீர் அங்கங்கே தடைபட்டு ஓடிக்கொண்டிருக்கிறது. இதனால் உப்பனாறு வாய்க்கால் உருளையன்பேட்டை தொகுதிக்குட்பட்ட பகுதிகளான சாந்தி நகர், இளங்கோ நகர், சாரதி நகர், கென்னடி நகர், திடீர் நகர்,கோவிந்தசாலை,புதுநகர்,குபேர் நகர், வாஞ்சிநாதன் வீதி, சுப்பிரமணிய சிவா வீதி, காமராஜர் வீதி, அந்தோணியார் கோவில் வீதி, பாரதிதாசன் வீதி,சகாய மாதா பாடசாலை வீதி, நேரு நகர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து மழைநீர் வெளியேறாமல் ஆங்காங்கே தேங்கி நிற்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் மேற்கண்ட பகுதியில் வசிக்கும் மக்களின் உடமைகள் பாதிக்கப்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
கடந்த 16 ஆண்டுகளாக நடைபெற்று வரும் உப்பனாறு வாய்க்கால் மேல் சாலை அமைக்கும் பணிகள் மிகவும் காலதாமதமாகவும், தோய்வாகவும், தான்தோன்றித்தனமாகவும் நடைபெறுவதால், மழை காலங்களில் மழைநீர் வெளியேறி உப்பனாறு வாய்க்காலில் ஓடாமல் மக்கள் வசிக்கும் பகுதிகளில் தேங்கி நிற்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. இவைகளுக்கு தீர்வு காண, உருளையன்பேட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் நேயம் மக்கள் கழக தலைவருமான நேரு(எ)குப்புசாமி புதுச்சேரி முதல்வர் , துறை அமைச்சர், அரசுத்துறை அதிகாரிகளுக்கும் பணிகளை முடிக்க தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு பலமுறை வலியுறுத்தி இருந்தார்.
உப்பனாறு வாய்க்கால் மேல் சாலை அமைக்கும் பணி விரைந்து முடித்தால் தான் இதற்கான தீர்வு எட்டப்படும் என்றும் மேலும் உப்பனாறு வாய்க்கால் மேல் சாலை அமைக்கும் பணிக்காக கொட்டப்பட்ட கற்கள் மற்றும் மணல் சுமார் நான்கு அடி வரை வாய்க்காலில் உள்ளதால் இது போன்ற நிலை ஏற்படுகிறது.
மேலும் நான்கு அடி உள்ள கற்கள் மற்றும் மணல்களை தூர்வாரினாலே உப்பனாறு வாய்க்காலில் மழைநீர் எளிதில் சென்று கடலில் கலக்கும். இதுபோன்ற அடைப்புகளால் தான் ஒவ்வொரு ஆண்டு மழை காலங்களிலும் இப்படிப்பட்ட பிரச்சனைகள் வருகிறது.
விரைவில் இதற்கான தீர்வு எட்டப்படாத பட்சத்தில் உருளையன்பேட்டை தொகுதி மற்றும் சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்த பொதுமக்களை திரட்டி போராட்டம் நடத்த வேண்டிய சூழ்நிலையை உருவாக்க வேண்டாம் என்று புதுச்சேரி அரசை கேட்டுக் கொண்டார்.
தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.