Times of Puducherry
திருப்பதிக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக திருமலையின் முழுமையான தகவல்களுடன் ‘கருடா மேப்’ செயலியை தேவஸ்தானம் அறிமுகம் செய்துள்ளது.
திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு வரும் பக்தர்கள் யாருடைய உதவியும் இல்லாமல், தாங்கள் செல்ல வேண்டிய இடத்தை எளிதாகசென்றடையும் வகையில், திருமலை-திருப்பதி தேவஸ்தானம் ‘கருடா மேப்’ என்ற சிறப்பு செயலியை உருவாக்கி அறிமுகம் செய்துள்ளது. திருமலை திருத்தலம் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே தளத்தில் வழங்கும் வகையில் இந்தச் செயலி உருவாக்கப்பட்டுள்ளது.
பக்தர்கள் தாங்கள் செல்ல விரும்பும் இடத்தின் பெயரை செயலியில் பதிவு செய்வதன் மூலமாகவோ அல்லது குரல் பதிவு மூலமாகவோ அந்த இடத்தை எளிதாகச் சென்றடையலாம். நடந்து சென்றால் எவ்வளவு தூரம், வாகனத்தில் சென்றால் எவ்வளவு தூரம் சென்றடைய எவ்வளவு நேரம் ஆகும் என்பன போன்ற விவரங்களையும் செயலிதெரிவிக்கும். மேலும் குறைந்த நேரத்தில் எளிதாக சென்றடையக்கூடிய வழியையும் செயலி பரிந்துரைக்கும்.
பல்வேறு வகையான தரிசனங்களுக்கான நுழைவுவழிகள், கியூவளாகங்கள், லட்டு விற்பனை மையங்கள், தங்கும் விடுதிகள், அன்னப்பிர சாதம் வழங்கும் மையங்கள், உணவு மையங்கள், குடிநீர் மையங்கள், மருத்துவ மையங்கள் உள்ளிட்ட முக் கிய இடங்களின் முழுமையான தகவல்களை இந்தச் செயலி மூலம் பக்தர்கள் தெரிந்து கொள்ளலாம்.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருகிற 12 முதல் 20-ந்தேதிவரை நடக்க உள்ள நவராத்திரி பிரம்மோற்சவத்தை முன்னிட்டு திருமலையில் பக்தர்கள் கூட்டம் அதிகரிக்கும் நிலையில், பக்தர்களின் வசதிக்காக திருப்பதி தேவஸ்தானம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. கருட வாகனச் சேவை நாளில் அதிகளவில் பக்தர்கள் திரள வாய்ப்புள்ளதால், திருமலைக்கு வாகனங்களின் வருகை மற்றும் போக்குவரத்தை கட்டுப்படுத்தி, திருப்பதியிலேயே வாகனங்களை நிறுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.
மேலும் பிரம்மோற்சவ விழா நாட்களில் வி.ஐ.பி. பிரேக் தரிசனம் உள்ளிட்ட பல்வேறு ஆர்ஜித சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. திருமலையில் உள்ள அனைத்து முக்கியமான பகுதிகள் குறித்த தகவல்களை பக்தர்கள் எளிதாக அறிந்து கொள்ள ‘கருடா மேப்’ செயலி பயனுள்ளதாக இருக்கும் என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.