Times of Puducherry
திருப்பூரில் ஓடும் நொய்யல் உள்ளிட்ட ஆறுகளில் நுரை பெருக்கெடுப்பதற்கு சோப்பு மற்றும் ஷாம்பு பயன்பாடு தான் காரணம் என்று அமைச்சர் மருத்துவர் வி.கே. இராஜிவ் கூறியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. இந்தக் கருத்தைக் கூறியிருப்பவர் தமிழக சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் மாசுக்கட்டுப்பாட்டுத் துறை அமைச்சர் என்பது தான் வருத்தமும் கவலையும் அளிக்கிறது.
நொய்யல் உள்ளிட்ட ஆறுகளில் நுரை பொங்குவதற்கு காரணம் கழிவுகள் கலக்கவிடப்படுவது தான் என்பது சிறு குழந்தைகளும் அறிந்தது தான். கோவை, திருப்பூர், கரூர் மாவட்டங்களில் சாயப்பட்டறைக் கழிவுகள் நொய்யல் ஆற்றில் கட்டுப்பாடின்றி கலக்கவிடப்படுவது தான் அதில் நுரை பெருக்கெடுப்பதற்கு காரணம் ஆகும். நொய்யலாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள ஒரத்துப்பாளையம் அணையில் சாயப்பட்டறைக் கழிவுகள் கலந்திருப்பது தான் அந்த அணையைக் திறக்கக் கூடாது என உழவர்கள் போராட்டம் நடத்துவதற்கு காரணம் என்பதும் பெரும்பான்மையினர் அறிந்தது தான்.
தென்பெண்ணை ஆற்றில் கெலவரப்பள்ளி அணையில் நுரை பெருக்கெடுப்பதற்கு காரணம் கர்நாடகத்தில் அந்த ஆற்றில் கலக்கவிடப்படும் கழிவுகள் தான். இந்த இரு ஆறுகளிலும் கழிவுகள் கலக்கவிடப்படுவதைத் தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த ஆறுகளை பலமுறை நான் நேரில் ஆய்வு செய்து அறிவுறுத்தியுள்ளேன். உச்சநீதிமன்றமும் இதுதொடர்பாக தமிழக, கர்நாடக அரசுகளுக்கு பல ஆணைகளை பிறப்பித்திருக்கிறது.
இவ்வளவுக்குப் பிறகும் அந்த ஆறுகளை தூய்மைப்படுத்த வேண்டிய பொறுப்பில் உள்ள அமைச்சர் ஒருவரே இவ்வாறு கூறியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. சுற்றுச்சூழல் அமைச்சர் இந்தக் கருத்துகளை எந்த சூழலில் கூறினார் என்பதை அனைவரும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
திருப்பூர் காசிபாளையம் பொது சுத்திகரிப்பு நிலையத்தில் சாயக்கழிவுநீர் சுத்திகரிப்புக் கட்டமைப்புகளை ஆய்வு செய்த அவர், திருப்பூரில் சாயக்கழிவுநீர் சுத்திகரிப்பு மையங்கள் சிறப்பாகச் செயல்படுகின்றன என்று பாராட்டியது மட்டுமின்றி, சாய ஆலை உரிமையாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்த பிறகு இவ்வாறு கூறியிருக்கிறார். அதை வைத்து பார்க்கும் போது தான் அமைச்சர் யாருடைய குரலாக ஒலிக்கிறார் என்ற ஐயம் ஏற்படுகிறது.
தமிழ்நாட்டில் ஆறுகள் உள்ளிட்ட நீர்நிலைகளில் சாயப்பட்டறை, நகரக் கழிவுகள், திடக்கழிவுகள் உள்ளிட்ட பல வகையான கழிவுகள் கலப்பதைத் தடுக்க போர்க்கால நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது. இத்தகைய சூழலில் ஆறுகளில் நுரை பொங்குவதற்கு சோப்பு, ஷாம்பு பயன்பாடு தான் காரணம் என நகைச்சுவை செய்வதை விடுத்து ஆறுகளைப் பாதுகாக்க சுற்றுச்சூழல் அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.