Times of Puducherry
18 வயதுக்கு கீழ் உள்ள சிறார்களை இரண்டு சக்கரம் , நான்கு சக்கரம் ஓட்டுவதற்கு பெற்றோர்கள் அனுமதி கொடுத்தால் பெற்றோர்களை உடனடியாக மோட்டார் வாகன சட்டத்தின் கீழ் கைது நடவடிக்கை எடுக்கப்படும் என புதுச்சேரி போக்குவரத்து முது நிலை காவல் கண்காணிப்பாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்:
புதுச்சேரியில் அனைத்து சாலைப் பயனாளர்களின் பாதுகாப்பையும் உறுதி செய்வதில் உறுதிபூண்டுள்ள புதுச்சேரி போக்குவரத்துக் காவல்துறை, 18 வயதிற்குட்பட்ட சிறார்களை மோட்டார் வாகனங்களை ஓட்ட அனுமதிக்க வேண்டாம் எனப் பெற்றோர் மற்றும் வாகன உரிமையாளர்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.
இத்தகைய விதிமீறல்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளது. 18.10.2026 அன்று, புதுச்சேரி வில்லியனூர்-கொம்பாக்கம் பிரதான சாலையில் பிள்ளையார் கோவில் அருகே சிறார் ஒருவர் மோட்டார் சைக்கிளை அஜாக்கிரதையாகவும் கவனக்குறைவாகவும் ஓட்டி, மற்றொரு மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் விபத்து ஏற்பட்டது. இவ்விபத்தில் மற்றொரு மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்றவர், பின்னிருக்கையில் அமர்ந்து சென்றவர் மற்றும் ஒரு குழந்தை ஆகியோர் காயமடைந்தனர். இச்சம்பவம் தொடர்பாக, சிறார் வாகன ஓட்டுநர் மீதும், சிறாரை வாகனம் ஓட்ட அனுமதித்ததாக அவரது பெற்றோரில் ஒருவர் மீதும் கிழக்கு போக்குவரத்துக் காவல் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இவ்வழக்கு தற்போது விசாரணையில் உள்ளது. சாலைப் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வுப் பிரச்சாரங்கள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருவதுடன், கடுமையான அமலாக்க நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன. இருப்பினும், சில பெற்றோர்களும் வாகனஉரிமையாளர்களும் சிறார்களை வாகனம் ஓட்ட அனுமதிப்பது தொடர்ந்து கவனத்திற்கு வருகிறது. இத்தகைய செயல்கள் சிறார்களின் உயிருக்கு மட்டுமின்றி, பிற சாலைப் பயனாளர்களின் உயிருக்கும் பாதுகாப்புக்கும் பெரும் ஆபத்தை ஏற்படுத்துகின்றன.
மோட்டார் வாகனச் சட்டம், 1988-ன் பிரிவு 199A-இன் கீழ், சிறார்கள் வாகனம் ஓட்டுவது கடுமையான சட்ட விதிமீறலாகும் என்பதைப் புதுச்சேரி போக்குவரத்துக் காவல்துறை பொதுமக்களுக்கு நினைவூட்டுகிறது. குறிப்பிட்ட சில வகை வாகனங்களுக்கு சட்டத்தில் வழங்கப்பட்டுள்ள விதிவிலக்குகளுக்கு உட்பட்டு, பொதுவாக 18 வயதிற்குக் குறைவானவர்கள் மோட்டார் வாகனங்களை ஓட்டுவதற்குசட்டப்படி அனுமதி இல்லை. சிறார் ஒருவர் மோட்டார் வாகனம் தொடர்பான குற்றத்தில் ஈடுபட்டால், சம்பந்தப்பட்ட சட்ட விதிகளின்படி அவரது பெற்றோர் அல்லது வாகன உரிமையாளர் பொறுப்பேற்க நேரிடும். இதற்காக ரூ.25,000 வரை அபராதமும், மூன்று ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும் விதிக்கப்படலாம்.
மேலும், பொருந்தக்கூடிய சட்ட விதிகளின்படி, சிறார் நீதிப் (குழந்தைகள் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு) சட்டம், 2015-ன் கீழ் சிறார் மீது நடவடிக்கை எடுக்கப்படலாம். சட்ட விதிகளின்படி, அச்சிறார் 25 வயதை அடையும் வரை ஓட்டுநர் உரிமம் பெறத் தகுதியற்றவராக இருப்பார்.
மேலும், இக்குற்றத்தில் பயன்படுத்தப்பட்ட வாகனத்தின் பதிவுச் சான்றிதழும் மோட்டார் வாகனச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விதிகளின்படி 12 மாத காலத்திற்கு ரத்து செய்யப்பட வாய்ப்புள்ளது.
தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.