Times of Puducherry

சிறையில் இருந்த 17 கைதிகள் தப்பியோட்டம்: ஒருவர் பிடிபட்டார்!

எழுதியவர்: News contributor
1 நிமிட வாசிப்பு
27 Oct 2026 • 2:42 AM
one-arrested-among-17-escapes-from-theni-prison

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே தேக்கம்பட்டியில் உள்ள மாவட்ட கிளைச் சிறையிலிருந்து 17 விசாரணை கைதிகள் காவலர்களைத் தாக்கிவிட்டு தப்பியோடியுள்ளனர். தப்பி ஓடிய கைதிகளை பிடிக்க போலீசார் 25 இடங்களில் வாகன சோதையில் ஈடுபட்டு வருகின்றனர்.

தேக்கம்பட்டியில் உள்ள சிறையில் இருந்த கைதி ஒருவருக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டது போல நாடகமாடியுள்ளனர். இதைக் கண்டு சிறைக்காவலர்கள் கதவைத் திறந்து உள்ளே சென்றபோது, அங்கு மறைந்திருந்த கைதிகள் திடீரென காவலர்களைக் கொடூரமாகத் தாக்கிவிட்டு சிறையிலிருந்து தப்பியோடியுள்ளனர். கைதிகள் தாக்கியதில் சிறப்பு எஸ்.ஐ மற்றும் சிறைக் காவலர்கள் உட்பட 3 பேர் காயமடைந்தனர்.

சிறையில் இருந்த 17 கைதிகள் தப்பியோட்டம்: ஒருவர் பிடிபட்டார்!

காயமடைந்த காவலர்களை தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மேலும் தப்பியோடிய 17 கைதிகளையும் பிடிப்பதற்காக தென்மண்டல காவல்துறை தலைவர் ஐ ஜி விஜயேந்திர பிதாரி தலைமையில் 17 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிரமாக தேடி வருகின்றனர்.

கைதிகள் தப்பியோடிய பகுதிக்கு அருகில் வனப்பகுதி உள்ளதால் சுமார் 10 கி.மீ சுற்றளவுப் பகுதிகள், மற்றும் தமிழக – கேரள எல்லைப் பகுதிகளில் 20க்கும் மேற்பட்ட இடங்களில் தற்காலிகத் தடுப்புகள் (Check-posts) அமைக்கப்பட்டு தீவிர வாகன சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

சிறையில் இருந்து தப்பிய 17 விசாரணைக் கைதிகளில் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர். தப்பிய கைதி மதுரையைச் சேர்ந்த பிரவீன், சிறையின் பின்புறம் உள்ள காட்டுப் பகுதியில் பதுங்கியிருந்தபோது பிடிபட்டார். பிரவீனை தேக்கம்பட்டி சிறைக்கு அழைத்து வந்த போலீசார், தப்பியோடிய மற்ற கைதிகளைப் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

NEWSLETTER & ALERTS

முக்கியச் செய்திகள் — உங்கள் கைபேசிக்கே

தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.

Scroll to Top