Times of Puducherry
தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் பெற்றுத் தருவதாகக் கூறி ரூ.400 கோடிக்கும் மேல் மோசடி நடந்ததாகக் கூறப்படும் வழக்கில், முன்ஜாமீன் மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்ததை தொடர்ந்து திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் நேற்று மாலை கைது செய்யப்பட்டார்.
கடந்த 2021–2026 திமுக ஆட்சிக் காலத்தில், தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம், பள்ளிகளின் தரம் உயர்த்துதல் மற்றும் டிடிசிபி அனுமதி உள்ளிட்ட பல்வேறு அரசு அனுமதிகளைப் பெற்றுத் தருவதாகக் கூறி கோடிக்கணக்கான ரூபாய் மோசடி செய்யப்பட்டதாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் தமிழ்நாடு தனியார் பள்ளிகள் கூட்டமைப்பின் செயலாளர் இளங்கோவன் புகார் அளித்திருந்தார்.இந்த புகாரின் அடிப்படையில் தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கக் கூட்டமைப்பின் முன்னாள் தலைவரும், திமுக பிரமுகருமான பி.டி.அரசகுமார்கைது செய்யப்பட்டார். அவர் 177 தனியார் பள்ளிகளிடம் இருந்து ரூ.400 கோடிக்கும் அதிகமாகப் பணம் பெற்றது போலீஸார் விசாரணையில் தெரியவந்தது.
இந்த வழக்கில் முன்னாள் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸுக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. அரசகுமார் மற்றும் அவரது குடும்பத்தினருக்குச் சொந்தமான 20 வங்கிக் கணக்குகளும், அன்பில் மகேஸின் நெருங்கிய நண்பரும், சங்கத்தின் மாநில பொருளாளரும், முன்னாள் எம்எல்ஏ-வுமான முத்துகுமார் தொடர்புடைய 29 வங்கிக் கணக்குகளிலும் பணப் பரிமாற்றம் நடந்தது கண்டறியப்பட்டன.
இதன் தொடர்ச்சியாக, அன்பில் மகேஸ் மீதும் ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. கடந்த மாதம் 16-ம் தேதி சென்னை மற்றும் திருச்சியில் உள்ள அன்பில் மகேஸின் வீடுகளில் போலீஸார் சோதனை நடத்தினர். கடந்த மாதம் 18-ம் தேதி சென்னை வேப்பேரியில் உள்ள காவல் ஆணையர் அலுவலகத்தில் அன்பில் மகேஸிடம் சுமார் 8 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது.
இந்த வழக்கில் முக்கிய நபராகக் கருதப்படும் முன்னாள் எம்எல்ஏ முத்துகுமார் தொடர்ந்து தலைமறைவாக இருப்பதால், அவர் வெளிநாடு தப்பிச் செல்வதைத் தடுக்கும் வகையில் அனைத்து விமான நிலையங்களுக்கும் ‘லுக் அவுட்’ நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
இதைத் தொடர்ந்து முன்ஜாமீன் கோரி அன்பில் மகேஸ் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு மீதான விசாரணை கடந்த 16-ம் தேதி அன்று நீதிபதி வி.லட்சுமி நாராயணன் முன்பாக நடந்தது. அப்போது காவல் துறை தரப்பில் ஆஜரான மாநில அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஆர்.ஜான் சத்யன், “இது ஒரு நிதி பயங்கரவாதம் தொடர்பான வழக்கு. இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள தனியார் பள்ளிகள் சங்க மாநில பொருளாளர் முத்துக்குமாரும், அன்பில் மகேஸும் நெருங்கிய நண்பர்கள். ஒன்றாகப் படித்தவர்கள். முத்துக்குமார் தலைமறைவாக உள்ளார். அவரை அன்பில் மகேஸ்தான் பாதுகாத்து வருகிறார். எனவே, அவருக்கு முன்ஜாமீன் வழங்கக் கூடாது” என்று ஆட்சேபம் தெரிவித்தார்.
அன்பில் மகேஸ் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி.வில்சன், “போலீஸார் அன்பில் மகேஸிடம் 8 மணி நேரத்துக்கும் மேலாக விசாரணை நடத்தி உள்ளனர். மீண்டும் விசாரணைக்கு அழைத்தால் ஆஜராகத் தயாராக உள்ளார். எனவே, முன்ஜாமீன் வழங்க வேண்டும்” என்று கோரினார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி தீர்ப்பை தள்ளி வைத்திருந்தார்.
இந்நிலையில், அன்பில் மகேஸ் முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி வி.லட்சுமி நாராயணன் நேற்று தீர்ப்பளித்தார். அந்த உத்தரவில் கூறியிருப்பதாவது: அரசு தரப்பில் 177 பள்ளி நிர்வாகிகளிடம் இருந்து ரூ.400 கோடி வரை கட்சி நிதி என்ற பெயரில் வசூலிக்கப்பட்ட தொகை இறுதியாக யாரிடம் சென்றுள்ளது என்பதை கண்டறிய அன்பில் மகேஸை போலீஸ் காவலில் எடுத்து விசாரிப்பது அவசியம் என்றும் அரசு தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
அரசியல் செல்வாக்கு மிக்க நபர்கள் தொடர்புடைய வழக்குகளில் விசாரணையின் ஆரம்ப கட்டத்திலேயே முன்ஜாமீன் வழங்கினால் அது புலன் விசாரணையைப் பாதிக்கும். தலைமறைவாகவுள்ள முத்துக்குமாரை பிடிக்க வேண்டிய கட்டாயத்தில், அவருடன் தொடர்புடைய அன்பில் மகேஸுக்கும் முன்ஜாமீன் வழங்குவது ஏற்புடையதாக இருக்காது. இவ்வாறு நீதிபதி தெரிவித்துள்ளார்.
தனது முன் ஜாமீன் தள்ளுபடி செய்யப்பட்டதை அடுத்து, நேற்று மதியம் அமைந்தகரை நெல்சன் மாணிக்கம் சாலையில் உள்ள வழக்கறிஞர் வில்சனின் அலுவலகத்துக்குச் சென்ற அன்பில் மகேஸ், உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வது தொடர்பாக அவரிடம் ஆலோசனை நடத்தினார்.
ஆலோசனை நடத்தி விட்டு வெளியே வந்தபோது, சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் அவரை கைது செய்தனர். பின்னர், வேப்பேரியில் உள்ள சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் உள்ள மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்தில் வைத்து அன்பில் மகேஸிடம் போலீஸார் விசாரணை நடத்தினர்.
பின்னர், ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று மருத்துவப் பரிசோதனை செய்தனர். பின்னர், ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில், நீதிபதி எல்.எஸ்.சத்யமூர்த்தி முன்னிலையில் ஆஜர்படுத்தினர்.
சட்டப்படி எதிர்கொள்வேன்: அன்பில் மகேஸ் செய்தியாளர்களிடம் கூறும்போது, ‘‘என் மீதான வழக்கை சட்டப்படி எதிர்கொள்வேன். விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்கி உள்ளேன். முன்ஜாமீன் மனு தள்ளுபடி ஆகிவிட்டது என்ற நினைப்பில் என்னை கைது செய்துள்ளனர். திமுக ஆட்சியில் தனியார் பள்ளிகளுக்கு இணையாக அரசு பள்ளிகளில் வசதிகளை ஏற்படுத்தி கொடுத்தோம்’’ என்றார்.
இந்தநிலையில், இன்று நண்பகல் முதல் முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியை காவல் வாகனத்தில் வைத்து அலைக்கழித்த போலீசார் தொடுத்த வழக்கில் நீதிபதி சத்தியமூர்த்தி தற்போது தீர்ப்பு வழங்கி இருக்கிறார். முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு நவம்பர் 6ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் விதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.