Times of Puducherry
தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு முதலமைச்சர் ரங்கசாமி தலைமையில் நடைபெற்ற இருசக்கர வாகனப் பேரணி, தொகுதியின் பல்வேறு பகுதிகள் வழியாக சென்று பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தது. பேரணியின் நிறைவில் பொதுமக்கள் மற்றும் கூட்டணி நிர்வாகிகள் மத்தியில் முதலமைச்சர் ரங்கசாமி கூறியதாவது:
நமது அரசு செயல்படுத்தி வரும் மக்கள் நலத்திட்டங்களை சிறப்பாக செயல்படுத்துவதில் இந்திய அளவில் புதுச்சேரி அரசு முன்னிலையில் உள்ளது. மக்களின் தேவைகளை அறிந்து, அவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் வகையில் பல்வேறு நலத்திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்தி வருகிறோம். தட்டாஞ்சாவடி தொகுதி மக்களின் நீண்டகால கோரிக்கைகளில் ஒன்றான வெங்கடேஸ்வரா நகர் வாய்க்கால் பணிகள் விரைவில் முடிக்கப்படும். இந்தப் பணியை வேட்பாளர் அசோக் ஆனந்த் தொடர்ந்து கவனித்து, மக்களின் தேவைகளுக்கு ஏற்ப பணிகளை முன்னெடுப்பார்.
அதேபோல், இன்னும் ஓரிரு ஆண்டுகளில் புதுச்சேரியின் அனைத்து பகுதிகளிலும் சுத்தமான குடிநீர் வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை ஏற்படுத்துவது அரசின் முக்கியமான பொறுப்பாகும்.இளைஞர்களுக்கு அதிக அளவில் வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில் செயல்படும் அரசு நமது அரசுதான். இளைஞர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு தொழில் வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்பை உருவாக்குவதற்கான பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
தட்டாஞ்சாவடி தொகுதியின் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் சிறப்பு பொருளாதார மண்டலம் (SEZ) அமைக்கப்படும். இதன் மூலம் புதிய தொழில்கள் உருவாகி, இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்கும். தொகுதியின் பொருளாதார வளர்ச்சிக்கும் இது முக்கிய பங்காற்றும். மக்களுக்கு நாங்கள் அளிக்கும் இந்த உத்தரவாதங்களை நிறைவேற்றக்கூடிய திறன் நம்மிடம் மட்டுமே உள்ளது. தேவையான திட்டங்களை நிறைவேற்றுவதற்கு அரசின் சார்பில் என்னால் நிதி ஒதுக்க முடியும். அதற்கான நடவடிக்கைகள் அனைத்தும் மேற்கொள்ளப்படும்.
எனவே, வெறும் வாக்குறுதிகளை மட்டும் அளிப்பவர்களுக்கு மக்கள் வாக்களிக்கக் கூடாது. மக்களின் தேவைகளை அறிந்து, அரசுடன் இணைந்து செயல்பட்டு, திட்டங்களை கொண்டு வரக்கூடிய சரியான வேட்பாளர் அசோக் ஆனந்த்.
அசோக் ஆனந்த் வெற்றி பெற்றால் தட்டாஞ்சாவடி தொகுதியின் வளர்ச்சிக்கு தேவையான அனைத்து திட்டங்களையும் அரசின் துணையுடன் நிறைவேற்ற முடியும். எனவே, தட்டாஞ்சாவடி தொகுதி மக்கள் ஜக்கு சின்னத்திற்கு வாக்களித்து அசோக் ஆனந்தை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்று முதலமைச்சர் ரங்கசாமி கேட்டுக்கொண்டார்.
தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.