Times of Puducherry

இலங்கை கடற்படையினர் அத்துமீறிய கைது நடவடிக்கைகள் எல்லை மீறிப் போய்க் கொண்டிருக்கிறது - மாணிக்கம் தாகூர்

எழுதியவர்: News contributor
1 நிமிட வாசிப்பு
4 Oct 2026 • 5:09 PM
manik tagore-fisherman-arrest

ராமேஸ்வரம் பகுதியில் மீன்பிடிக்க சென்ற ஒன்பது மீனவர்களை இலங்கை கடற்படை சிறை பிடித்துள்ளது தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் மாணிக்கம் தாகூர் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்:

ராமேஸ்வரம் தங்கச்சிமடத்திலிருந்து வாழ்வாதாரத்திற்காகக் கடலுக்குச் சென்ற மத்தியாஸ் (22), மோபிஸ் (21), அபிஸ்டன் (27), ஆண்டனி புரூட்ஸ் (42), எபிஸ்டன் (29), ஸ்டீவன்சன் (22), ஜான் ஜேசன் (24), ஆண்டனி பிரதீப் (26), சுபார்தன் (24) ஆகிய 9 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை நெடுந்தீவு அருகே மீண்டும் அராஜகமாகச் சிறைபிடித்து, அவர்களது விசைப்படகையும் பறிமுதல் செய்துள்ள செய்தி மிகுந்த வேதனையையும் அதிர்ச்சியையும் அளிக்கிறது.

பாரம்பரிய கடல் பகுதியில் மீன்பிடிக்கும் தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தொடர்ச்சியாக நடத்தும் தாக்குதல்களும், அத்துமீறிய கைது நடவடிக்கைகளும் எல்லை மீறிப் போய்க் கொண்டிருக்கின்றன. நமது மீனவர்களின் வாழ்வாதாரமும் உயிரும் தினசரி அச்சுறுத்தலுக்கு உள்ளாகி வரும் நிலையிலும், ஒன்றிய பாஜக அரசும் பிரதமர் நரேந்திர மோடியும் வாய்மூடி மௌனம் காப்பது தமிழக மக்களுக்குச் செய்யும் மன்னிக்க முடியாத துரோகமாகும். இலங்கை அரசுக்கு எதிராகத் தூதரக ரீதியாக உறுதியான நிலைப்பாட்டை எடுக்கத் துணிவின்றி, வெறும் பார்வையாளராக பாஜக அரசு வேடிக்கை பார்ப்பது கடும் கண்டனத்திற்குரியது.

இரு நாடுகளுக்கு இடையேயான உயர்மட்டப் பேச்சுவார்த்தைகள் மூலம் இப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதாகப் பல ஆண்டுகளாகக் கூறிவரும் மோடி அரசு, மீனவர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதில் முற்றிலும் தோல்வியடைந்துவிட்டது. வெற்று விளம்பர அரசியலிலும், வெளிநாட்டுச் சுற்றுப்பயணங்களிலும் காட்டும் ஆர்வத்தில் துளியளவேனும் நமது மீனவர்களின் துயரத்தைத் துடைப்பதில் மத்திய அரசு காட்டியிருக்க வேண்டாமா?

தற்போது சிறைபிடிக்கப்பட்டுள்ள ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 9 மீனவர்களையும், பறிமுதல் செய்யப்பட்ட விசைப்படகையும் இலங்கை அரசிடமிருந்து உடனடியாக மீட்க மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் போர்க்கால அடிப்படையில் தூதரக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். தொடர்கதையாகிவிட்ட இலங்கை கடற்படையின் இந்த அடக்குமுறைக்கு முற்றுப்புள்ளி வைத்து, தமிழ்நாட்டு மீனவர்களின் பாதுகாப்புக்கு ஒரு கானல் நீராக அல்லாமல், நிலையான மற்றும் நிரந்தரத் தீர்வை மத்திய பாஜக அரசு உடனடியாகக் காண வேண்டும்!

NEWSLETTER & ALERTS

முக்கியச் செய்திகள் — உங்கள் கைபேசிக்கே

தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.

Scroll to Top