Times of Puducherry
வங்கக்கடலில் உருவாகும் புயல் அக்.28-ல் ஆந்திரக் கடற்கரையில் கரையைக் கடக்க வாய்ப்பு. புயல் கரையை கடக்கும்போது அதிகபட்சமாக 140 கி.மீ. வேகத்தில் சூறாவளி காற்று வீச வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது .
இது சம்பந்தமாக சமூக நீதித்துறை அமைச்சர் வன்னியரசு தலைமையில், கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மான் முன்னிலையில் வடகிழக்குப் பருவமழையை முன்னிட்டு மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக்கூட்டம் விழுப்புரத்தில் நடைபெற்றது.
அமைச்சர் வன்னியரசு கூறுகையில்:
திண்டிவனம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட நீர்வளத்துறை கட்டுப்பாட்டில் உள்ள 80 ஏரிகளை துறை சார்ந்த அலுவலர்கள் ஆய்வு செய்வதோடு, தொடர் கண்காணிப்பில் இருக்க வேண்டும் எனவும், ஏரி, குளம், குட்டை உள்ளிட்ட நீர்நிலைகளில் நிலத்தடி நீர்மட்டத்தைப் பாதுகாக்கவும் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.
நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சிப் பகுதிகளில் உள்ள அனைத்து கால்வாய்களையும் தூர்வாரும் பணிகளை விரைவில் முடிப்பதோடு, மழைநீர் மற்றும் குப்பைகள் தேங்காத வகையில் பராமரிக்க வேண்டும் எனவும், திண்டிவனம் நகராட்சியின் 23 மற்றும் 24-ஆவது வார்டுகளில் மழைநீர் தேங்கும் பகுதிகளில் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டது.
மேலும், கடந்த ஆண்டு வடகிழக்குப் பருவமழையின்போது பாதிக்கப்பட்ட பகுதிகளைக் கண்டறிந்து, அப்பகுதிகளில் முன்னெச்சரிக்கைப் பணிகளை முன்கூட்டியே முடிக்க வேண்டும். கனமழை மற்றும் புயலால் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ள பகுதிகளில் உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு, தயார் நிலையில் இருக்க வேண்டும். பருவமழை தொடங்கிய நிலையில் சாலைப் பணிகள் மற்றும் கால்வாய்ப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். பழுதடைந்த மற்றும் விழும் நிலையில் உள்ளமரங்களை அகற்றுவதோடு, மின்கம்பிகளில் மரக்கிளைகள் உரசாதவாறு நடவடிக்கை எடுக்க வேண்டும். மழைக்காலத்தில் தடையற்ற மின்சாரம் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்.
வெள்ளத்தால் பாதிக்கப்படக்கூடிய மக்களைத் தங்க வைப்பதற்காக நிவாரண முகாம்களைத் தயார் நிலையில் வைத்திருப்பதோடு, முகாம்களில் குடிநீர், மின்சாரம், கழிப்பறை மற்றும் உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இருப்பதை உறுதி செய்துகொள்ள வேண்டும். மழைநீர் வெளியேற்றுவதற்கு ஏதுவாக மோட்டார்கள், மரம் அறுக்கும் இயந்திரங்கள், மோட்டார் படகுகள் மற்றும் கட்டுமரங்கள் உள்ளிட்ட தேவையான மீட்பு உபகரணங்களைத் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். அவைமுறையாக இயங்குகின்றனவா என்பதை முன்கூட்டியே பரிசோதித்து தயாராக வைத்திருக்க வேண்டும். பொதுமக்களுக்குத் தடையின்றிக் குடிநீர் வழங்குவதுடன், குடிநீரில் குளோரின் பயன்படுத்தி பாதுகாப்பான குடிநீர் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். கொசு ஒழிப்புப் பணிகளைத் தீவிரப்படுத்தி, டெங்கு உள்ளிட்ட நோய்கள் பரவாமல் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
மழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்படும் மக்களுக்கு உணவு, உடை,போர்வை, பாய், தலையணை, பால், அரிசி மற்றும் மளிகைப் பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசிய உதவிகளை வழங்குவதற்குத் தேவையான ஏற்பாடுகளை தன்னார்வலர்களுடன் இணைந்து செய்ய வேண்டும். வடகிழக்குப் பருவமழை தொடர்பான புகார்கள் மற்றும் அவசரத் தகவல்களைப் பெற்று உடனடியாக நடவடிக்கைமேற்கொள்ளும் வகையில், 24 மணி நேரக் கட்டுப்பாட்டு அறையை தொடர்புகொள்வதற்கு மாவட்ட பேரிடர் கட்டுப்பாட்டு அறை எண் 1077, புகார் தொடர்பு எண் (லேண்ட்லைன்) 04146-223265 மற்றும் வாட்சப் எண் 7200151144 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளும் பொதுமக்களின் புகார்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மாவட்டத்தில் கடலோர பகுதியான மரக்காணம் வட்டத்தில் 13 மீனவ கிராமங்களில் 10 பல்நோக்கு பேரிடர் பாதுகாப்பு மையத்தில் சுமார் 6,700 நபர்கள் தங்கவைக்கும் வகையிலும், மரக்காணம் பேரூராட்சியில் நான்கு பல்நோக்கு புயல் பாதுகாப்பு மையங்களும் தயார் நிலையில் உள்ளது.
மேலும், கடலோர பேரிடர் அபாயத்தை முன்கூட்டியே தெரிவிக்கும் வகையில் 13 இடங்களில் முன்னெச்சரிக்கை அமைப்புகளும் நிறுவப்பட்டுள்ளது. அதேபோல் பேரிடர் காலங்களில் உடனடியாக செயல்படுவதற்காக திண்டிவனம் மற்றும் மரக்காணம் பகுதிகளில் மொத்தம் 1,540 பயிற்சி பெற்ற முதல்நிலை மீட்பாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதில் திண்டிவனம் பகுதியில் 645 நபர்களும், மரக்காணம் பகுதியில் 895 நபர்களும் உள்ளனர். மேலும், பல்நோக்கு பேரிடர் பாதுகாப்புமையங்களில் பணியாற்றுவதற்காக 900 பயிற்சி பெற்ற தன்னார்வலர்கள் தயார் நிலையில் உள்ளனர்.
மேலும், வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித்துறை, பொதுப்பணித்துறை, நீர்வளத்துறை, நெடுஞ்சாலைத்துறை, மின்வாரியம், தீயணைப்புத்துறை, மீன்வளத்துறை மற்றும் சுகாதாரத்துறை உள்ளிட்ட அனைத்துத் துறைகளும் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும். எனவே, மழை மற்றும் வெள்ளப்பாதிப்பு ஏற்படும் சூழலில், பொதுமக்களின் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளித்து உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அனைத்து துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தொடர்ந்து, திண்டிவனம் நகராட்சி உழவர் சந்தையில் மழைநீர் வெளியேற்றுவது குறித்து நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்யப்பட்டு, உழவர் சந்தையில் உள்ள வியாபாரிகளிடம் குறைகளை கேட்டறியப்பட்டது வன்னி அரசு அவர்கள் தெரிவித்தார்.
தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.