Times of Puducherry

மம்முட்டி கொடுத்த ஊக்கம்; நன்றி தெரிவித்த கார்த்திக் சுப்புராஜ்: டோரதிக்கு கிடைத்த பாசிட்டீவ் விமர்சனம்

எழுதியவர்: செய்தி ஆசிரியர்
1 நிமிட வாசிப்பு
4 Oct 2026 • 10:44 AM
dorathy director Release Photo with Actor Mommotty

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ், சனந்த், ரிஷிகாந்த் ஆகியோர் நடிப்பில் வெளியான டோரதி திரைப்படம், ரசிகர்கள் மற்றும் திரைத்துறையினரிடையே தொடர்ந்து நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. சமீபத்தில், தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களுடன் சேர்த்து, சூர்யா மற்றும் விஜய் ஆண்டனியும் இப்படத்தைப் பாராட்டினர்.

இதனிடையே படத்தின் இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் நடிகர் மம்மூட்டியுடன் இருக்கும் புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார். அந்தப் பதிவின் தலைப்பில், “உங்கள் பொன்னான நேரத்திற்கும், வாழ்த்துகளுக்கும், ‘டோரதி’ குறித்த உங்கள் ஊக்கமளிக்கும் வார்த்தைகளுக்கும் மிக்க நன்றி மம்மூட்டி சார்… இது எனக்கு மிகவும் அர்த்தமுள்ள ஒன்று. நீங்கள் எப்போதும் எங்களுக்கு ஒரு உத்வேகம் சார்” என்று பதிவிட்டுள்ளார்.

கார்த்திக் மற்றும் மம்மூட்டியுடன் உள்ள ஒரு புகைப்படத்தில், படத்தின் கதாநாயகர்களான சனந்த் மற்றும் ரிஷிகாந்தும் இருக்கின்றனர்.
டோரதி திரைப்படம் நட்பு, காதல், சகோதரத்துவம் மற்றும் அடையாளம் ஆகிய கருப்பொருள்களை மையமாகக் கொண்டு கதை சொல்கிறது. இது வாழ்நாள் நண்பர்களான சுப்பு (சனந்த்) மற்றும் கார்த்தி (ரிஷிகாந்த்) ஆகிய இருவரைப் பின்தொடர்கிறது. கிராமப்புற பகுதியில் நிலவும் சாதிப் பாகுபாடு, வன்முறை மற்றும் ஆணாதிக்கம் உள்ளிட்ட கடினமான சூழ்நிலைகளில் அவர்கள் வளர்ந்த விதம், அவர்களின் உலகப் பார்வையை உருவாக்குகிறது.

இரக்கமுள்ள ஒரு பெண்ணின் (கீர்த்தி சுரேஷ்) வருகை, கிராமத்தின் இரக்கமற்ற வாழ்க்கையை அவர்களுக்கு, முக்கியமாக சுப்பிற்கு சற்று நிம்மதியானதாக மாற்றுகிறது. இருப்பினும், இரு நண்பர்களில் ஒருவர் மற்றொருவரைத் துரத்த வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்படும்போது, இருவருக்கும் இடையிலான விஷயங்கள் சிக்கலாகின்றன.

டோரதி திரைப்படம் எல்.ஜி.பி.டி.க்யூ+ (LGBTQ+) அம்சத்தைக் கையாண்ட விதத்திற்காகப் பலரின் பாராட்டுகளையும், சிலரின் வெறுப்பையும் பெற்றுள்ளது. படம் வெளியானதிலிருந்தே, இப்படத்திற்கு எதிராக எழுந்த வெறுப்பின் காரணமாக, திரைப் பிரபலங்கள் இதற்கு எதிர்ப்புக் குரல் கொடுக்க வேண்டியதாயிற்று.

இதற்கிடையில், எல்.ஜி.பி.டி.க்யூ+ (LGBTQ+) சமூகத்தை அதிகம் ஏற்றுக் கொள்ளும் வேறு ஒரு இடத்தில் படம் வெளியாகியிருந்தால், வசூல் ரீதியாக இன்னும் சிறப்பாகச் செயல்பட்டிருக்கும் என்று சிலர் கருத்து தெரிவிக்கின்றனர். குறிப்பாக, கார்த்திக்கின் இப்படத்திற்கும், மம்மூட்டி ஒரு தன் சேர்க்கையாளராக நடித்த 2023-ஆம் ஆண்டின் ‘காதல்: தி கோர்’ (Kaathal: The Core) திரைப்படத்திற்கும் இடையே சில ஒப்பீடுகள் செய்யப்பட்டுள்ளன.

பாலின அடையாளம், எல்.ஜி.பி.டி.க்யூ+ (LGBTQ+) பிரதிநிதித்துவம் மற்றும் சினிமாவில் சமூகத்தின் ஏற்பு குறித்து, அந்த மலையாளப் படத்தை விட இப்படம் பரவலான விவாதங்களைத் தூண்டியுள்ளது.

NEWSLETTER & ALERTS

முக்கியச் செய்திகள் — உங்கள் கைபேசிக்கே

தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.

Scroll to Top