Times of Puducherry
சோழர் காலக் கட்டடக் கலையின் பாரம்பரிய சிறப்புகளை அறியும் வகையில் கல்லூரி மாணவர்களுக்கான சுற்றுலா பயணத்தைமாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில் குமார் தொடங்கி வைத்தார்.
கடலூர் நகர அரங்கம் அருகே கடலூர் மாவட்டத்தில் சோழர் கால கட்டிடக் கலையின் சிறப்பம்சங்களாக விளங்கும் பல்வேறு தளங்களை கல்லூரி மாணவர்கள் பார்த்து அறிந்து கொள்ளும் வகையில் ஒரு நாள் சுற்றுலா பயணத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார் இன்று (23.10.2026) கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
தொடர்ந்து மஞ்சக்குப்பம் அமைந்துள்ள மணிகூண்டினை பழமை மாறாமல் புதுப்பிக்கும் பணி நடைபெறுவதை பார்வையிட்டு ஆய்வு செய்தார். மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது:
கடலூர் மாவட்டத்தில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க நினைவுச் சின்னங்கள் மற்றும் தளங்களைப் பாதுகாத்தல், பராமரித்தல், அவற்றின் அடிப்படை உள்கட்டமைப்பு மற்றும் வசதிகளை மேம்படுத்துதல், மேலும் நமது மாவட்டத்தில் உள்ள பாரம்பரிய கட்டடங்கள் மற்றும் தளங்களை பாதுகாப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திடுவும் வகையிலும், மக்கள் இயக்கமாக முன்னெடுத்துச் செல்லும் நோக்கிலும், மாணவர்கள் மற்றும் இளைஞர்களிடையே வரலாற்று சிறப்புகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், பாரம்பரியச் சுற்றுலா நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்றன.
அதன் ஒரு பகுதியாக, ஆர்வமுள்ள தமிழ் மற்றும் வரலாற்று ஆசிரியர்கள் உள்ளிட்ட ஆசிரியர்களின் பங்களிப்புடன், சோழர் காலக் கட்டடக் கலையின் சிறப்புகளை மாணவர்கள் நேரடியாக அறிந்துகொள்ளும் வகையில், பெரியார் அரசு கலைக் கல்லூரியைச் சேர்ந்த 50 மாணவ, மாணவிகளுக்கு பிரத்யேக பேருந்து ஏற்பாடு செய்யப்பட்டு, கடலூர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீமுஷ்ணம் நிதிஸ்வரசுவாமி கோயில், கீழக்கடம்பூர் ருத்ரபதி கோயில் மற்றும் எரும்பூர் கடம்பவனேஸ்வரர் கோயில் ஆகிய வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்களை பார்வையிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இச்சுற்றுலாவின் மூலம் மாணவர்கள் பழமையான கோயில்களின் வரலாறு, கட்டடக் கலை நுட்பங்கள், சிற்பக் கலைகள் மற்றும் அவற்றின் பண்பாட்டு முக்கியத்துவம் குறித்து நேரடியாக அறிந்துகொள்ள வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும், வரலாற்று மரபுச் சின்னங்களைப் பாதுகாப்பதன் அவசியம் குறித்த விழிப்புணர்வை இளைய தலைமுறையினரிடம் ஏற்படுத்துவதும் இந்நிகழ்ச்சியின் முக்கிய நோக்கமாகும் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார். தொடர்ந்து செய்தியாளர் சந்திப்பில்:
கடலூர் மாவட்டத்திற்கு வானிலை ஆய்வு மையம் இன்றைய தினம் சீரான மழை பொழிவு இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பருவமழை முன்னெச்சரிக்கையாக வருவாய்த்துறை, நீர்வளத்துறை மற்றும் ஊரக வளச்சித்துறை என பல்வேறு துறைகள் ஒருங்கிணைந்து குழு அமைக்கப்பட்டு நீர்நிலைகள் மற்றும் தாழ்வான பகுதிகளை கண்காணிக்கப்பட்டு வருகிறது. மேலும், மழையினால் பொதுமக்களின் குடிசை வீடுகள் மற்றும் கால்நடைகள் பாதிக்கப்படும் பட்சத்தில் அதற்கான உதவிகளும் வழங்கப்பட்டு வருகிறது. பெரிய அளவிலான நீர்நிலைகள் குறிப்பாக வீரணாம், வெலிங்டன் போன்ற நீர்நிலைகளில் குறைவான அளவு தண்ணீர் உள்ளது. நீர்நிலைகளை தினசரி கண்காணிக்கவும் நீர்வளத்துறை அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும், மாநகராட்சி, நகராட்சி மற்றும் ஊரக வளர்ச்சித் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள நீர்நிலைகள் அந்தந்த துறை சார்ந்த அலுவலர்கள் கண்காணிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. தென்பெண்ணை, கெடிலம் ஆறுகளில் தற்போது வரை சீரான நீர்வரத்து உள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் பருவமழையினை முன்னிட்டு அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு, தயார் நிலையில் உள்ளது. பொதுமக்கள் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் அவ்வவபோது தெரிவிக்கப்படும் அறிவுறுத்தல்களை முறையாக பின்பற்றி பாதுகாப்பாக இருக்கவும் கேட்டுக்கொள்ளப்படுகிறது என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட சுற்றுலா அலுவலர் கண்ணன், தொல்லியல் துறை அலுவலர் சுரேஷ், பெரியார் கல்லூரிப் பேராசிரியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.