Times of Puducherry

கொடைக்கானலில் வெள்ளப்பெருக்கு: கிராம மக்கள் கடும் அவதி

எழுதியவர்: News contributor
1 நிமிட வாசிப்பு
24 Oct 2026 • 5:22 PM
floods-in-kodaikanal-villagers-sufferings

கொடைக்கானல் மலைப் பகுதியில் உள்ள காட்டாற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில் சின்னூர், பெரியூர் உள்ளிட்ட மலைக்கிராம மக்கள் கிராமத்தை விட்டு வெளியேற முடியாமல் தவித்து வருகின்றனர்.

கொடைக்கானல் மலைப்பகுதியில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால், அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கும் சின்னூர், பெரியூர் உள்ளிட்ட மலைக்கிராமங்களில் சாலை வசதி இல்லை. இக்கிராம மக்கள் அவசரம் மற்றும் அத்தியாவசிய தேவைகளுக்காக பல கி.மீ. தொலைவுக்கு வனப்பகுதி வழியாக நடந்தே சென்று வரும் நிலை உள்ளது.

கனமழையால், மலைக்கிராம மக்கள் செல்லும் வழியில் உள்ள கல்லாறு, மூலையாறு, கெங்காரு ஓடை என்று அழைக்கப்படும் பெரியாறு உள்ளிட்ட காட்டாற்றில் திடீர் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இதனால், மக்கள் தங்கள் கிராமத்தை விட்டு வெளியேற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இவர்கள் மருத்துவ தேவைக்குக்கூட சென்று வர முடியாமல் தவித்து வருகின்றனர். கனமழை காரணமாக, கிராமத்தில் சில வீடுகளும் சேதமடைந்துள்ளன. மின்தடையும் ஏற்பட்டுள்ளதால், கிராமங்கள் இருளில் மூழ்கியுள்ளது.

முன்னதாக, கொடைக்கானலின் முக்கிய சுற்றுலாத் தலங்களில் ஒன்றான, நுழைவிடத்தில் உள்ள வெள்ளி நீர்வீழ்ச்சியில் மழைநீர் பெருக்கெடுத்து ஆர்ப்பரித்துக் கொட்டியது. வழக்கமாக வெள்ளியை உருக்கி ஊற்றுவதைப் போலக் காட்சியளிக்கும் இந்த நீர்வீழ்ச்சி, பெருமழையால் முற்றிலும் மாறுபட்ட தோற்றத்தில், பெரும் காட்டாற்று வெள்ளம் பெருக்கெடுத்து ஓடிய நிலையில் காட்சியளித்தது. இதனால் கொடைக்கானல் செல்லும் பாதையில் காட்டாற்று வெள்ளம் பெருக்கெடுத்தது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு உள்ளாகினர். வெள்ளி நீர்வீழ்ச்சி வெள்ளப்பெருக்கு காணொளி சமூக ஊடகங்களில் பெரும் வைரலாகி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

கனமழையால் மக்களின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படும் நிலை நிலவுகிறது. கொடைக்கானல், தாண்டிக்குடி மலைப்பகுதிகளுக்குச் சுற்றுலா வருவதை தவிர்க்க வேண்டும். மலைப்பாதைகளில் பயணிக்கும் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.
வெள்ளப்பெருக்கு அபாயம் உள்ள பகுதிகளுக்கு தேவையற்ற பயணங்களை மேற்கொள்வதை தவிர்க்க வேண்டும். வழிகாட்டு நெறிமுறைகளை முறையாக பின்பற்ற வேண்டும் என திண்டுக்கல் காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

NEWSLETTER & ALERTS

முக்கியச் செய்திகள் — உங்கள் கைபேசிக்கே

தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.

Scroll to Top