Times of Puducherry

டெல்டாவில் கேள்விக்குறியான சம்பா சாகுபடி; டெல்டாவை வறட்சி பாதித்த பகுதியாக அறிவியுங்கள் - பி.ஆர். பாண்டியன்

எழுதியவர்: News contributor
1 நிமிட வாசிப்பு
8 Oct 2026 • 1:05 PM
declare-delta-districts-drought-affected-pr pandian

காவிரிப் படுகையின் கடைமடையாக நாகை மாவட்டத்தில் அமைந்துள்ள வேளாண் நிலப் பரப்புகளில் கடந்த பல மாதங்களாக நிலவும் வறட்சியின் காரணமாக வேளாண் மற்றும் கால்நடை வளர்ப்பு தொழில் பாதிப்புக்குள்ளாகி வருகிறது. நாகை மாவட்டத்தில் 2025-ல் குறுவை பருவத்தில் 30 ஆயிரம் ஹெக்டேரில் நெல் விளைவிக்கப்பட்ட நிலையில், நிகழாண்டுக்கான (2026) குறுவைப் பருவத்தில் 1,720 ஹெக்டேரில் மட்டுமே சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

நிலத்தடி நீர் வெகுவாக குறைந்ததோடு உவர்ப்புத்தன்மை அதிகரித்துள்ள நாகை மாவட்டத்தில் ஆழ்துளை கிணறுப் பாசனம் என்பது பெயரளவில் மட்டுமே உள்ளது. இந்த மாவட்டத்தில் மேற்கொள்ளப்படும் குறுவை, தாளடி மற்றும் சம்பா பருவ நெல் சாகுபடி முழுக்க முழுக்க காவிரி தண்ணீரை மட்டுமே நம்பி நடைபெறுகிறது.

டெல்டாவில் கேள்விக்குறியான சம்பா சாகுபடி; டெல்டாவை வறட்சி பாதித்த பகுதியாக அறிவியுங்கள் - பி.ஆர். பாண்டியன்

வேதாரண்யம் உள்ளிட்ட கடலோரப் பகுதிகளில் மானாவாரி நிலங்களில் மழை நீரை மட்டுமே நம்பி ஒருபோக சம்பா பருவ சாகுபடி மேற்கொள்வது வழக்கம். இந்த மாவட்டத்தில் சம்பா இலக்காக கடந்த ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட 65 ஆயிரம் ஹெக்டேர் பரப்பையே இந்த ஆண்டிலும் இலக்காக வைக்கப் பட்டுள்ளது. நிகழாண்டில் குறுவைப் பருவம் பொய்த்துப் போன நிாலயில், அந்த நிலத்தில் சம்பா பருவத்தில் சாகுபடி நடைபெறுவதால் சம்பாவின் நிலப் பரப்பு சுமார் 70 ஆயிரம் ஹெக்டேராக அதிகரிக்க வாய்ப்புள்ளது. நின்றுபோன குறுவை மற்றும் தாளடி பருவத்தை ஒரு போகமாக சம்பா பருவத்தில் ஈடு செய்யலாம் என விவசாயிகள் எதிர்பார்த்திருந்த நிலையில் போதிய காலத்தில் தண்ணீர் வராததால் தற்போது சம்பாவும் கேள்விக்குறியாகியுள்ளது.

பல்வேறு சூழலியல் காரணங்களால் தமிழகத்தின் சிரபுஞ்சி என அழைக்கப்பட்ட திருப்பூண்டி, மாறுபட்ட கடல் அமைப்பைக் கொண்ட வேதாரண்யம் உள்ளிட்ட அதிக மழைப் பொழிவுக்கான சிறப்பை பெற்ற இடங்கள் இந்த மாவட்டத்தில் இருந்த போதிலும் பல மாதங்களாக மழை பொய்த்து வருகிறது இந்நிலையில், மேட்டூர் அணையை நம்பி நேரடி நெல் விதைப்பு செய்யப்பட்ட வயல்களுக்கு இதுவரை தண்ணீர் கிடைக்காத சூழலில் வேதாரண்யம், வடமழை, மணக்காடு பகுதியில் தண்ணீர் கிடைக்கப்பெற்ற வயலில் முளைத்த பயிர்கள் காய்ந்தும், தண்ணீர் கிடைக்காததால் விதையே முளைக்காத நிலையில் வயல்கள் காய்ந்தும் கிடப்பதால் விவசாயிகள் பரிதவிக்கின்றனர்.

இதுகுறித்து தமிழக காவிரி விவசாயிகள் சங்க பொதுச் செயலாளர் பி.ஆர்.பாண்டியன் கூறியதாவது; நாகை, திருவாரூர் மாவட்ட கடைமடை பகுதியில் உள்ள ஆறுகள், விளைநிலங்களுக்கு இதுவரை மேட்டூர் தண்ணீர் சென்றடையவில்லை. குறிப்பாக, வேதாரண்யம் பகுதியில் விளைநிலங்கள் பாலைவனத்தைப் போல காட்சியளிக்கிறது. பாசன ஆறுகளில் தண்ணீர் இல்லாத நிலையிலும் மழை நீரை நம்பி வேளாண்மை செய்யும் அந்தப் பகுதியில் கூட எல்நினோ பாதிப்பு காரணமாக வறட்சியின் தாக்கம் உச்சத்தில் உள்ளது.

ஏற்கெனவே முழுமையான கடன் தள்ளுபடி இல்லாததால் கடன் சுமையில் தவிக்கும் விவசாயிகள், தற்போது கந்து வட்டிக்காரர்களிடம் கடன் வாங்கி சம்பா சாகுபடி செய்துள்ளனர். இதுவும் பொய்த்துவிட்டால் அவர்களின் வாழ்வாதாரம் மேலும் மோசமடையும் அபாயம் உள்ளது. எனவே, டெல்டாவை வறட்சி பாதித்த பகுதியாக அறிவித்து, விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும்.

2002-ல் ஏற்பட்ட பஞ்சம், பட்டினி போன்ற நிலை மீண்டும் உருவாகாமல் தடுக்க, விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள் மற்றும் கால்நடைகளை பாதுகாப்பதற்கான ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை தமிழக அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்பதே டெல்டா மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது என்றார்.

NEWSLETTER & ALERTS

முக்கியச் செய்திகள் — உங்கள் கைபேசிக்கே

தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.

Scroll to Top