Times of Puducherry
விஜயதசமி அன்று குழந்தைகளுக்கு எழுத்தறிவிக்கும் நிகழ்ச்சி ” வித்யாரம்பம்” என்று அழைக்கப்படுகிறது. அரிசி நிரம்பிய தட்டில் குழந்தையின் விரலைப் பிடித்து முதல் எழுத்தை எழுதச் செய்வது அழகிய மரபு. இது வெறும் எழுத்துப் பயிற்சி மட்டுமல்ல, வாழ்நாள் முழுவதும் கற்றுக்கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தை விதைக்கும் தொடக்கமாகவும் கருதப்படுகிறது. இசை, நடனம் போன்ற கலைகளைக் கற்க தொடங்குவதற்கும் இந்நாள் சிறப்பானதாக போற்றப்படுகிறது.
விஜயதசமி என்றால் வெற்றி தருகின்ற நாள். நவராத்திரியில் தான் அகில உலகையும் ஆட்டி படைத்த மகிஷாசுரனை அழிக்கத் தேவியானவள் துர்க்கை வடிவம் எடுத்தாள். அசுரனுடன் போர் செய்து ஒன்பதாம் நாளான நவமியில் மகிஷாசுரனை துர்க்காதேவி வதம் செய்தாள். மறுநாள் தசமியில் தேவர்கள் அந்த வெற்றியை ஆயுத பூஜை செய்து கொண்டாடியதால், நாமும் அதை விஜயதசமி என்று கொண்டாடுகிறோம். பத்தாம் நாள் விஜயதசமி அன்று துவங்கப்படும் எந்தவொரு செயலும் வெற்றிகரமாக முடியும்.
இந்த விஜயதசமியில் குழந்தைகளுக்கு ‘வித்யாரம்பம்’ செய்துவிக்கபடுகிறது. வித்யாரம்பம் என்பது சிறு குழந்தைகளின் அறிவு அறிமுகப்படுத்தப்படும் ஒரு மங்கள விழா.(வித்யா என்றால் “அறிவு”, ஆரம்பம் என்றால் “துவக்கம்”)இது அக்ஷராப்யாசம் (எழுத்தறிவித்தல்) என்றும் அழைக்கப்படுகிறது. ஆரம்பக் கல்வியை இந்நன்னாளில் தொடங்கினால், அவர்கள் மேன்மேலும் கல்வியில் சிறந்து விளங்குவார்கள் என்பது ஐதீகம்.வித்யாரம்பம் விழாவானது கோயில்களில் மட்டுமல்லாமல் வீடுகளிலும் செய்துவிக்கபடுகிறது.
விஜயதசமி அன்று தொடங்கும் அனைத்து நற்செயல்களும் வெற்றியே தரும். முதல் நாளான சரஸ்வதி பூஜை அன்று மாணவர்கள் புத்தகங்கள், நோட்டு, பேனா, பென்சில் போன்றவற்றை அடுக்கி வைத்து பூஜை செய்த பிறகு மறுநாள் விஜயதசமி அன்று பூஜித்து நைவேத்தியத்துடன், ஆரத்தி காட்டி புத்தகங்களை எடுத்துப் படித்தால் கல்வியில் மேன்மேலும் அபிவிருத்தி அடைந்து சரஸ்வதி கடாட்சம் அவர்களுக்கு என்றென்றும் நிலைத்து நிற்கும்.
இந்த விஜயதசமி நாளில் குழந்தைகளைப் பள்ளியில் சேர்ப்பது, (அ) வீட்டிலேயே வித்யாரம்பம் செய்வது, நடனம், சங்கீதம், வீணை, வயலின் போன்ற கலைகளைக் கற்க ஆரம்பித்தல் நன்று. முன்பே கற்க ஆரம்பித்தவர்களும் முதல் நாள் சரஸ்வதி பூஜையில் வைக்கப்பட்ட புத்தங்கள், வாத்தியக் கருவிகள், மற்றும் தமது தொழிலுக்கான கருவிகளை விஜய தசமி பூஜை முடிந்து உபயோகம் செய்தல் நலம் என்று கூறப்படுகிறது. இந்த நல்ல நாளில் தமது குருவுக்கு வந்தனங்கள் செய்து குரு-தக்ஷிணை அளித்து வணங்குதல் மரபு.
இந்த விஜயதசமி நாளில் நாம் துவங்கும் எல்லா புதிய முயற்சிகளுக்கும், குறிப்பாக (வித்தியாரம்பம் செய்தல்) ஏடு தொடங்குதல், புதிய வியாபார நிலையம் ஆரம்பித்தல், புதிய தொழில் ஸ்தாபனங்கள் போன்றன ஆரம்பித்தால் வெற்றியும் புகழும் கிடைக்கும்.வித்யாரம்பம்:
பிறந்த குழந்தைகள் இயல்பாகவே தன் கண்களால் காண்பவற்றையும், நாம் அவர்களுக்குச் சொல்லக்கூடிய சின்ன சின்னப் பாடல்கள், கதைகள், எழுத்துக்களை உச்சரித்தல் மூலமும் கற்றுத் தெரிந்து கொள்கின்றன. இருப்பினும் முறையான கல்வியை முதன்முதலில் கற்கத் தொடங்கும்போது இறைவனை வழிபட்டுத் தொடங்குவது சிறப்பானது. அவ்வாறு செய்வதன் மூலம் குழந்தைக்கு இறைபக்தி உண்டாகும். கற்கும் கல்வியும் இறைவடிவமே என்பதை உணரும். இதற்காகவே வித்யாரம்பம் என்னும் எழுத்தறிவித்தலை நம் முன்னோர்கள் கடைப்பிடித்தனர்.
மேலும், மழலை குழந்தைகளைப் பள்ளியில் சேர்ப்பதற்கும், பாட்டு, இசைக் கருவிகள் பயிற்சி, நடனப் பயிற்சி, பிறமொழிப் பயிற்சி, புதிதாக ஒரு தொழிலைக் கற்றுக்கொள்வது ஆகியவற்றை இந்த நாளில் தொடங்கினால் சரஸ்வதி தேவியின் அருள் பரிபூரணமாகக் கிடைக்கும் என்பது ஐதீகம்.
குழந்தைகளுக்கு வித்யாரம்பம் எனும் அக்ஷராப்யாசம் செய்ய நவராத்திரி காலத்தில் வரும் ‘விஜயதசமி தினமே மிகவும் சிறப்பானது. அன்றைய தினத்தில் அதிகாலையிலேயே எழுந்து குழந்தையை நீராடச் செய்து, புத்தாடை உடுத்த வேண்டும். பிறகு பூஜைக்குத் தேவையான மஞ்சள், குங்குமம், தேங்காய், சந்தனம், ஊதுபத்தி, கற்பூரம், பூ, பூமாலை, நெல் அல்லது அரிசி சிறிதளவு(சுமார் 1கிலோ), வெற்றிலை, பாக்கு, நைவேத்தியத்திற்காகச் சர்க்கரைப் பொங்கல் அல்லது பாயசம், குழந்தை எழுதுவதற்கான எழுதும் பலகை,, சாக்பீஸ், நோட்டு புத்தகம், பென்சில், பேனா போன்றவற்றைத் தயார் செய்து நல்ல நேரம் தொடங்குவதற்கு முன்பாக கோயிலுக்குச் சென்று. பூஜை விதிமுறையின்படி, ஒரு தட்டில் அரிசியை (நெல்) முழுவதுமாக தூவி வைக்க வேண்டும்.
பிறகு கோயிலில் உள்ள அர்ச்சகர் குழந்தையின் காதில் சரஸ்வதி மற்றும் பிரணவ மந்திரத்தை ஓதி, அக்குழந்தைகளின் சுட்டுவிரலை பிடித்து தட்டில் உள்ள அரிசியின் மேல் தங்கள் தாய் மொழியின் எழுத்தை, பொதுவாக அ,ஆவன்னாவை எழுத வைப்பார். சிலர் ஓம் ஸ்ரீ கனபதைபே நமஹ என்றும் எழுதுவர். இதன் பிறகு ஒரு தங்க மோதிரத்தை கொண்டு குழந்தையின் நாவில் அதே போல் எழுதுவார்கள். குழந்தை தடையின்றி எழுதவும், பேசவும் இந்த சுபநிகழ்ச்சி ஒரு ஆரம்பமாக இருக்கட்டும் என்ற முறையில் மிகவும் மகிழ்ச்சியாக இது கொண்டாடப்படுகிறது.
கல்விக் கடவுளான சரஸ்வதி தேவிக்கென்று தமிழகத்தில் தனிச் சிறப்புடன் விளங்கும் திருக்கோயில் திருவாரூர் மாவட்டம் கூத்தனூரில் அமைந்துள்ளது. இக்கோயில் மகா சரஸ்வதி அம்மன் கோயில் என்று அழைக்கப்படுகிறது. தமிழ்ப் புலவர் ஒட்டக்கூத்தருடன் தொடர்புடைய இத்தலத்தில் விஜயதசமி விழா இன்று வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. குழந்தைகளின் கல்விப் பயணத்தைத் தொடங்குவதற்காகப் பெற்றோர்கள் இங்கு வந்து வழிபடுவது குறிப்பிடத்தக்கது.
தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.