Times of Puducherry
புதுச்சேரி நடைபெற்ற தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தலில் 80.81 சதவீத வாக்குகள் பதிவாகின, வாக்குகள் பதிவான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு வேட்பாளர்களின் முகவர்கள் முன்பு சீல் வைத்த தேர்தல் நடத்தும் அதிகாரிகள் பலத்த போலீசார் பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் மையமான மோதிலால் நேரு அரசு பாலிடெக்னிக் கல்லூரிக்கு அனுப்பி வைத்தனர்.
புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது, இந்த தேர்தலில் ஆளும் என்.ஆர்.காங்கிரஸ் சார்பில் அசோக் ஆனந்த், திமுக சார்பில் சேது செல்வம், காங்கிரஸ் சார்பில் விநாயகம், இந்திய கம்யூனிஸ்டு கட்சி சலீம், நாம் தமிழ் கட்சி கார்த்திகா குமாரி உள்ளிட்ட 11 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.
இந்த தேர்தலில் ஆண் வாக்காளர்கள் 12,575, பெண் வாக்காளர்கள் 14,341, மூன்றாம் பாலினத்தவர் 5 பேர் என மொத்தம் 26,921 பேர் வாக்களிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. காலை 7:00 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு சரியாக மாலை 6 மணிக்கு முடிவடைந்தது, வாக்குப்பதிவின் முடிவில் 80.81 சதவீதம் வாக்காளர்கள் வாக்களித்து இருந்தனர். மேலும் 109 பேர் தபாலில் வாக்களித்தனர்.
தேர்தலில் பதிவான வாக்குகள் அடங்கிய மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில் சீல் வைத்த தேர்தல் நடத்தும் அதிகாரிகள், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள மோதிலால் நேரு அரசு பாலிடெக்னிக் கல்லூரிக்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அனுப்பி வைத்தனர்.
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள மோதிலால் நேரு அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் மூன்றடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது மேலும் 24 மணி நேரமும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது. புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் வருகின்ற 9-ம் தேதி எண்ணப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
கை சின்னம் பொறிக்கப்பட்ட துண்டு சீட்டுகள் வீசப்பட்டது மற்றும் வெடிகுண்டு போட்டதாக புரளி என சிறுசிறு அசம்பாவிதங்களை தவிர அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடைபெற்றது.
இதனிடையே தட்டாஞ்சாவடி தொகுதி ஜெயராம் நகரை சேர்ந்த தினேஷ் என்பவர் தனது குடும்பத்துடன் உழவர் கரை வட்டாட்சியர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடிக்கு 6:21 மணிக்கு வாக்களிக்க வந்தார், அப்பொழுது வாக்குப்பதி இயந்திரங்கள் சீல் வைக்கப்பட்டு விட்டதாகவும் இனிமேல் வாக்களிக்க முடியாது என்று அதிகாரிகள் தெரிவித்தனர் இதனையடுத்து தனது ஜனநாயக கடமையை ஆற்ற முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பினார் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.