Times of Puducherry
திருப்பதியில் நவராத்திரி பிரம்மோற்சவத்திற்கான 300 ரூபாய் சிறப்பு தரிசன டிக்கெட்டுகளுக்கான முன்பதிவு தொடங்கியுள்ளது. விருப்பமுள்ளவர்கள் அதிகாரப்பூர்வ இணையதளம் வாயிலாக முன்பதிவு செய்துக் கொள்ளலாம் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
திருப்பதி ஏழுமலையான் தரிசனத்திற்காக தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். மேலும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பல மணி நேரம் காத்திருந்து தரிசனம் பெற்றுச் செல்கின்றனர். பலர் முன்பதிவு செய்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
இந்தநிலையில், சந்திர நாட்காட்டியின்படி, மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை கூடுதல் மாதம் நடைபெறுகிறது. இதுபோன்ற நிகழ்வுகளில் வருடாந்திர பிரம்மோற்சவங்கள் பாத்ரபத மாதம் நடத்தப்படுகின்றன, அதே நேரத்தில் நவராத்திரி பிரம்மோதசவங்கள் தசரா நவராத்திரி காலத்தில் நடத்தப்படுகின்றன.
இந்த நவராத்திரி பிரம்மோத்சவங்களில் கொடி ஏற்றுதல், பிரமாண்ட ரத ஊர்வலம் மற்றும் கொடி இறக்குதல் சடங்குகள் இல்லை. அதேநேரம் தினமும் காலை வாகன சேவை (தெய்வீக வாகனங்களில் ஊர்வலம்) காலை 8 மணி முதல் 10 மணி வரையிலும், இரவு வாகன சேவை இரவு 7 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் நடைபெறும். கருட வாகன சேவை மாலை 6:30 மணி முதல் இரவு 11:30 மணி வரை திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும், திருமலை திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அக்டோபர் 11 ஆம் தேதியில் நவராத்திரி பிரம்மோற்சவத்துக்கான அங்குரார்ப்பணமும், அக்டோபர் 12-ல் நவராத்திரி பிரம்மோற்சவம் தொடங்குகிறது. இதனைத் தொடர்ந்து, அக்டோபர் 16-ல் பிரம்மோற்சவ கருட சேவை நடைபெறுகிறது. தொடர்ந்து, அக்டோபர் 20 ஆம் தேதி நவராத்திரி பிரம்மோற்சவத்தின் சக்கர ஸ்நானம் மற்றும் வேதாந்த தேசிகர் சாற்றுமுறை நடைபெறுகிறது. அக்டோபர் 21-ல் பூதத்தாழ்வார் வருட திருநட்சத்திரம், அக்டோபர் 26-ல் பௌர்ணமி கருட சேவையும் நடைபெறுகிறது.
இந்தநிலையில், திருப்பதியில் நவராத்திரி பிரம்மோற்சவத்திற்கான 300 ரூபாய் சிறப்பு தரிசன டிக்கெட்டுகளை அக்டோபர் 7 முதல் முன்பதிவு செய்து கொள்ளலாம் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது. அக்டோபர் 12, 13, 14 மற்றும் அக்டோபர் 18, 19, 20 ஆகிய தேதியில் தரிசனம் செய்ய https://ttdevasthanams.ap.gov.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் காலை 10 மணிக்கு முன்பதிவு தொடங்குகிறது.
மேலும் திருப்பதியில் நவராத்தி பிரம்மோற்சவம் நடைபெற உள்ளதாலும், புரட்டாசி கடைசி வாரத்தில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் என்பதாலும், இந்த 10 நாட்களுக்கு வி.ஐ.பி இடைவேளை தரிசனமும், சிறப்பு முன்னுரிமை தரிசனமும் ரத்து செய்யப்படுவதாக தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.