Times of Puducherry

கூட்டுறவு வங்கிகளில் நகை கடன் வாங்குபவர்களுக்கு குட் நியூஸ்.! இனி ஒரு கிராமுக்கு எவ்வளவு கிடைக்கும் தெரியுமா.?

எழுதியவர்: Ramprasath S
1 நிமிட வாசிப்பு
6 Oct 2026 • 5:11 PM
tamil nadu cooperative bank gold loan rules revised rs 10000 per gram

தமிழ்நாடு கூட்டுறவு வங்கிகளில் நகைக் கடனுக்கான விதிமுறைகள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் கூட்டுறவு நிறுவனங்களில் வழங்கப்படும் நகைக் கடன்களுக்கான விதிமுறைகள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக சாமானிய மக்களுக்கு கூடுதல் கடன் தொகையும், வட்டி குறைப்பு சலுகைகள் கிடைக்கும் வகையில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு நகைகளின் சந்தை மதிப்பில் 75 சதவீதம் அல்லது கிராம் ஒன்றிற்கு அதிகபட்சமாக ரூ.7,000 வரை மட்டுமே கடன் வழங்கப்பட்டு வந்தது.

ஆனால் புதிய உத்தரவின்படி நகை கடன்களுக்கு ஒரு கிராமிற்கான கடன் தொகை அதிகபட்சமாக ரூ.10,000 வரை அல்லது நகைகளின் சந்தை மதிப்பில் 75% என உயர்த்தப்பட்டு மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள் தங்களது சொந்த கிளைகள் மூலம் வழங்கும் நகை கடன்களுக்கான வட்டிக்கும், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் மூலம் வழங்கப்படும் நகை கடன்களுக்கான வட்டிக்கும் இடையே இதுவரை பெரும் வேறுபாடு நிலவி வந்தது. இதனை சீரமைக்கும் வகையிலும் புதிய உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அதன்படி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள் விதிக்கும் வட்டி விகிதத்தை விட, தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் பொதுமக்களுக்கு வழங்கப்படும் நகை கடன்களுக்கான வட்டி வீதம் குறைந்தது 1.25% குறைவாக இருக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களின் லாப வரம்பு 2.25 சதவீதத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். 

அரசின் இந்த புதிய உத்தரவில் உயர்த்தப்பட்ட கடன் அளவானது, இனி புதிதாக பெறப்படும் நகை கடன்களுக்கு மட்டுமில்லாமல், ஏற்கனவே கூட்டுறவு வங்கிகளில் கடன் பெற்று தற்போது புதுப்பிக்கப்படும் கடன் நகைக் கடன்களுக்கும் முழுமையாக பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பண்டிகை காலங்கள் வரிசை கட்டி நிற்கும் இந்த வேளையில் எளிய மற்றும் நடுத்தர மக்களின் பொருளாதார தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் இந்த அறிவிப்பு வெளியாகி இருப்பது பொது மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

NEWSLETTER & ALERTS

முக்கியச் செய்திகள் — உங்கள் கைபேசிக்கே

தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.

Scroll to Top