Times of Puducherry

மத்திய அரசின் மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சக மாநாட்டில் சிவக்கொழுந்து கலந்து கொள்கிறார்

எழுதியவர்: News contributor
1 நிமிட வாசிப்பு
6 Oct 2026 • 7:53 PM
New delhi-dwcd-summit-sivakolunthu

புதுடில்லியில் பாரத பிரதமர் மோடி தலைமையில் மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு குறித்து வருகின்ற 8 ,9 ஆம் தேதிகளில் நடைபெறும் மாநாட்டில் புதுச்சேரி குடிமைப்பொருள் அமைச்சர் சிவக்கொழுந்து கலந்து கொள்கிறார். இது குறித்து அமைச்சரின் அலுவலக செய்தி குறிப்பில்:

புதுச்சேரி அரசின் குடிமைப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் விவகாரங்கள் மற்றும் மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சர் V.P. சிவக்கொழுந்து மத்திய அரசின் மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் சார்பில் புதுடெல்லியில் வரும் அக்டோபர் 8 மற்றும் 9 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ள இரண்டு நாள் துறைசார் மாநாட்டில் பங்கேற்க உள்ளார்.

மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் சார்பில் நடைபெறும் இம்மாநாட்டில், அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சர்கள் மற்றும் துறைசார் மூத்த அதிகாரிகள்
பங்கேற்கின்றனர்.

மாநாட்டின் நிறைவு நிகழ்வில் இந்தியப் பிரதமர் சிறப்புரையாற்ற உள்ளார்.

புதுடெல்லியில் உள்ள சுஷ்மா ஸ்வராஜ் பவன், சாணக்கியபுரியில் நடைபெறும் இம்மாநாடு, பெண்கள் மற்றும் குழந்தைகளின் ஊட்டச்சத்து, பாதுகாப்பு, நலன் மற்றும் அதிகாரமளித்தல் தொடர்பான முக்கியமான கொள்கை மற்றும் செயலாக்கப் பிரச்சினைகள் குறித்து மாநிலங்கள் மற்றும் மத்திய அரசுக்கு இடையிலான ஒருங்கிணைப்பை வலுப்படுத்தும் வகையில் நடைபெறுகிறது.

மேலும், Mission Saksham Anganwadi & Poshan 2.0, Mission Shakti ஆகிய திட்டங்களின் செயல்பாடுகள் மற்றும் முன்னேற்றம் குறித்து ஆய்வு செய்யப்படுவதுடன், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் நடைமுறையில் உள்ள சிறந்த செயல்முறைகள் பகிர்ந்து கொள்ளப்பட உள்ளன. இம்மாநாட்டில் புதுச்சேரியின் சார்பில் பங்கேற்கும் அமைச்சர் . V.P.சிவக்கொழுந்து புதுச்சேரியில் மகளிர் மற்றும் குழந்தைகள் நலனுக்காக செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு திட்டங்கள் குறித்து எடுத்துரைக்க உள்ளார். புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் தேவைகள், திட்டங்களைச் செயல்படுத்துவதில் எதிர்கொள்ளப்படும் சவால்கள் மற்றும் மகளிர் மற்றும் குழந்தைகள் நலனை மேலும்
மேம்படுத்துவதற்கான தேவையான நடவடிக்கைகள் குறித்தும் மத்திய அரசின் கவனத்திற்கு கொண்டு செல்ல உள்ளார்.

மேலும், அமைச்சரின் புதுடெல்லி பயணத்தின் போது தமிழ் அமைப்புகள் மற்றும் பல்வேறு பிரதிநிதிகளுடனான சந்திப்புகளும்
திட்டமிடப்பட்டுள்ளன. மகளிர் மற்றும் குழந்தைகளின் நலன், பாதுகாப்பு மற்றும் முன்னேற்றத்திற்காக மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு இடையிலான ஒருங்கிணைப்பை வலுப்படுத்தும் முக்கியமான தேசிய அளவிலான இம்மாநாட்டில் புதுச்சேரியின் சார்பில் அமைச்சர் பங்கேற்பது குறிப்பிடத்தக்கது.

NEWSLETTER & ALERTS

முக்கியச் செய்திகள் — உங்கள் கைபேசிக்கே

தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.

Scroll to Top