Times of Puducherry

பெருவாரியான மக்கள் எனக்கு வாக்களித்து வருவது மகிழ்ச்சி அளிக்கிறது - சேது செல்வம்

எழுதியவர்: News contributor
1 நிமிட வாசிப்பு
6 Oct 2026 • 4:24 PM
dmk-sedu selvam-polling

புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதியில் தொடர்ந்து மூன்று முறை போட்டியிட்டு தோல்வியுற்றதாகவும், இருந்தாலும் மக்களின் பிரச்சினைக்காக தொடர்ந்து போராடி சிறை சென்றுள்ளேன். இந்த முறை பெரிய கட்சியான திமுகவில் போட்டியிடுகிறேன் எனவே இந்த முறை மக்கள் சாமானிய மனிதனான எனக்கு வாக்களித்து வெற்றி பெற வைப்பார்கள் என திமுக வேட்பாளர் சேதுசெல்வம் தெரிவித்தார்.

புதுச்சேரி பாக்கமுணையான்பேட்டில் உள்ள நூலகத்தில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் இருசக்கர வாகனத்தில் வந்து திமுக வேட்பாளர் சேது செல்வம் வாக்களித்தார்.

செய்தியாளர்களிடம் பேசிய திமுக வேட்பாளர் சேதுசெல்வம், நான் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் (DMK) தேர்தலில் போட்டியிடுகிறேன், இப்பொழுதுதான் நான் எனது வாக்கை பதிவு செய்தேன், வாக்களித்துவிட்டு வெளியே வரும்போது, மக்கள் அனைவரும் மிகுந்த எழுச்சியுடனும் மகிழ்ச்சியுடனும் இருந்தனர். நாங்கள் உங்களுக்குத்தான் வாக்களித்துவிட்டு வருகிறோம் என்று மக்கள் கூறியது மிகுந்த மகிழ்ச்சியை அளித்ததாக கூறினார்.

மேலும் இந்தத் தொகுதியைப் பொறுத்தவரை நான் புதியவன் அல்ல. கடந்த மூன்று முறை போட்டியிட்டு தோல்வி பெற்றிருந்தாலும், மக்களின் உரிமைக்காகவும் மாநில வளர்ச்சிக்காகவும் தொடர்ந்து போராடி பலமுறை சிறை சென்றுள்ளேன், தொகுதி மக்களுக்கு என்னை நன்றாகத் தெரியும். என்னுடைய பொருளாதாரம் என்பது ஒரு எளிய, சாதாரண பின்னணியைச் சேர்ந்ததுதான். ஆனாலும், என்னை நம்பி வாக்களித்த ஆயிரக்கணக்கான மக்கள் எனது எளிய பின்னணியை நம்பியே வாக்களித்துள்ளதாக தெரிவித்தார்.

திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் பெரிய கட்சியாக களமிறங்கியுள்ளதால், மக்கள் வாக்களித்து வெற்றி பெற முழுமையாகத் தயாராகிவிட்டனர். குறிப்பாக, இந்தத் தொகுதியில் போட்டியிடும் மற்ற கட்சியினர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் உள்ளன. என்னைப் பொறுத்தவரை, நான் புதுச்சேரி மாநில வளர்ச்சிக்காகவும், தொகுதியின் முன்னேற்றத்துக்காகவும், அடித்தட்டு மக்களைத் திரட்டி அவர்களின் உரிமைக்காகவும் தொடர்ந்து போராடியுள்ளேன். எனவே, இன்றைக்கு எனது வெற்றி வாய்ப்பு மிகவும் பிரகாசமாக உள்ளது என கூறினார்.

NEWSLETTER & ALERTS

முக்கியச் செய்திகள் — உங்கள் கைபேசிக்கே

தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.

Scroll to Top