Times of Puducherry
புதுச்சேரி, சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை சார்பில் டெங்கு மற்றும் சிக்கன்குனியா விழிப்புணர்வு பிரச்சாரம்.
புதுச்சேரியில் உள்ள சுகாதார இயக்குனரக வளாகத்தில் டெங்கு மற்றும் சிக்கன்குனியா விழிப்புணர்வு பிரச்சார ஆட்டோ வாகனங்களை சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இயக்குநர் டாக்டர் S.செவ்வேல் கொடியசைத்து துவக்கி வைத்தார்கள், துணை இயக்குனர் (செய்தி, கல்வி மற்றும் தொடர்புப் பிரிவு) டாக்டர் G. ரகுநாதன் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்தார். இந்த நிகழ்வின் போது துணை இயக்குனர் (பொது சுகாதாரம்) டாக்டர் V.உமாசங்கர், உதவி இயக்குனர் டாக்டர் M. முருகன் (தேசிய கொசு மற்றும் பூச்சுகளால் பரவும் நோய்த்தடுப்பு பிரிவு) மற்றும் மலேரியா தொழில்நுட்ப பிரிவு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
புதுச்சேரியில் மழைக்காலம் தொடங்க உள்ள நிலையில், பொதுமக்கள் தங்கள் வீடுகளிலும் சுற்றுப்புறங்களிலும் டெங்கு காய்ச்சல் பரவுவதைத் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று சுகாதாரத்துறை இயக்குனர் கேட்டுக்கொண்டுள்ளார். மழைநீரானது வீட்டைச் சுற்றி வீணாகக் கிடக்கும் பயன்படுத்தப்படாத டயர்கள், உடைந்த பாத்திரங்கள், நெகிழி (பிளாஸ்டிக்) கப்புகள், தேங்காய் ஓடுகள் மற்றும் சிமெண்ட் தொட்டிகள் போன்ற பொருட்களில் தேங்குவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன.இத்தகைய தேங்கி நிற்கும் தூய்மையான நீரில் தான் டெங்கு காய்ச்சலை பரப்பக்கூடிய ‘ஏடிஸ்’ (Aedes) கொசுக்கள் மிக அதிவேகமாக இனப்பெருக்கம் செய்கின்றன.
புதுவை முழுவதும், இந்த ஆண்டு ஜனவரி முதல் இன்று வரை 637 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், சுகாதாரத் துறை மேற்கொண்ட தீவிர டெங்கு தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளின் காரணமாக, இந்த ஆண்டு புதுச்சேரி முழுவதும் டெங்கு உயிரிழப்புகள் பதிவாகவில்லை. கொசுக்கள் உற்பத்தியாவதை தடுத்து, டெங்கு பாதிப்பு ஏற்படுவதை தடுத்து “டெங்கு இல்லாத புதுச்சேரியை” உருவாக்க பொதுமக்கள் அனைவரும் தங்கள் வீட்டை மட்டுமின்றி சுற்றுப்புறத்தையும் தூய்மையாக வைத்துக்கொண்டு, அரசு எடுக்கும் நோய் தடுப்பு நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு நல்க வேண்டும் என சுகாதாரத்துறை இயக்குனர் மீண்டுமொருமுறை வலியுறுத்தியுள்ளார்.
தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.