Times of Puducherry
ஐபிஎல் தொடரில் கடந்த இரண்டு சீசன்களாக டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் தலைமைப்பயிற்சியாளர் பதவியில் இருந்த ஹேமங் பதானிக்கு பதிலாக இந்தியாவின் முன்னாள் கேப்டனான கங்குலி ஐபிஎல் 2027 தொடருக்கு முன்னதாக, டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் புதிய தலைமைப் பயிற்சியாளராக சவுரவ் கங்குலி நியமிக்கப்பட்டுள்ளார்.
2019-ஆம் ஆண்டு டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் ஆலோசகராக இணைந்த தற்போது வரை அந்த அணியில் பயணித்து வரும் நிலையில், பிசிசிஐ தலைவராக அவர் பதவி வகித்த காலத்திற்குப் பிறகு, டெல்லி அணியின் ஆண்கள் மற்றும் பெண்கள் ஆகிய இரு அணிகளுக்குமான கிரிக்கெட் இயக்குநராக நியமிக்கப்பட்டார். அண்மையில், பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளராகப் பணியாற்றி, இந்த ஆண்டின் தொடக்கத்தில் நடைபெற்ற எஸ்.ஏ20 தொடரின் இறுதிப் போட்டி வரை அவ்வணியை அழைத்துச் சென்றார்.
இதுகுறித்து பேசிய அவர், ஐபிஎல் தொடரில் தலைமைப் பயிற்சியாளர் பொறுப்பை ஏற்பதை ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளேன். டெல்லி கேப்பிட்டல்ஸ் என்பது என் இதயத்திற்கு மிகவும் நெருக்கமான ஒரு அணி, மேலும் பல ஆண்டுகளாக அவ்வணியுடன் வலுவான பிணைப்பைக் கொண்டுள்ளேன்” என்று கங்குலி கூறினார்.
அணியின் உரிமையாளர்கள், நிர்வாகம், உதவி ஊழியர்கள் மற்றும் வீரர்களுடன் நான் நெருக்கமாகப் பணியாற்றியுள்ளேன். இது எனக்கு ஒரு உற்சாகமான பொறுப்பாக அமைந்துள்ளது. நம்மிடம் திறமையான வீரர்கள் உள்ளனர், மேலும் கடந்த காலங்களில் சிறந்த முறையில் கிரிக்கெட் விளையாடியுள்ளோம். புதிய சீசனில் இந்த அணியுடன் இணைந்து பணியாற்றவும், ஒரு வலுவான மற்றும் பயமற்ற அணியை உருவாக்கவும் காத்திருக்கிறேன்.
Dilli, it’s time for Dadagiri 🐅 Sourav Ganguly, Head Coach of the Tigers 🔥 https://t.co/EMTPQ9TB64— Delhi Capitals (@DelhiCapitals) October 6, 2026
Dilli, it’s time for Dadagiri 🐅 Sourav Ganguly, Head Coach of the Tigers 🔥 https://t.co/EMTPQ9TB64
டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு அவர்களின் முதல் ஐபிஎல் கோப்பையை வென்று தருவதே கங்குலியின் முதன்மைப் பணியாக இருக்கும். ஐபிஎல் தொடரின் தொடக்க காலத்திலிருந்து விளையாடும் அணிகளில் இன்னும் கோப்பையை வெல்லாத இரு அணிகளில் டெல்லி ஒன்றாகும் (மற்றொன்று பஞ்சாப் கிங்ஸ்). 2020-ஆம் ஆண்டு இறுதிப் போட்டி வரை முன்னேறியதே டெல்லியின் சிறந்த செயல்பாடாகும்.
அடுத்த ஆண்டில் புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்தபோதிலும், இறுதிப் போட்டிக்குத் தகுதிபெறத் தவறியது. 2021 சீசனுக்குப் பிறகு அவர்கள் பிளே-ஆஃப் சுற்றுக்குத் தகுதிபெறவில்லை. கடந்த ஆண்டு அக்சர் படேல் – ஹேமங் பதானி கூட்டணியின் கீழ் 6-வது இடத்தைப் பிடித்தனர். நவம்பர் 15 கெடுவுக்குள் தனது உதவிப் பணியாளர்களை இறுதி செய்வதும், தக்கவைக்கப்படும் வீரர்களைத் திட்டமிடுவதுமே கங்குலியின் முதல் பணியாக இருக்கும். 2027 சீசனுக்கு முன்னதான மினி ஏலம் டிசம்பர் மாத மத்தியில் கோவாவில் நடைபெறவுள்ளது.
தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.