Times of Puducherry

நெசவாளர்களுக்கு கூலியை உயர்த்தி தரக் கோரி போராட்டம் - சண்முகம் அறிவிப்பு

எழுதியவர்: News contributor
1 நிமிட வாசிப்பு
6 Oct 2026 • 7:27 PM
cpi(m)-announced-protest-weavers-wages-hike

தமிழக அரசின் புதிய ரக வேஷ்டி, சேலை உற்பத்திக்கான கூலியை நெசவாளர்களுக்கு உயர்த்தி தரக் கோரி, சிபிஐ(எம்) சார்பில்
காத்திருப்பு போராட்டம் நடத்தப் போவதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மார்க்சிஸ்ட் சண்முகம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்:

தமிழக அரசின் இலவச சேலை உற்பத்தி திட்டத்தில் விருதுநகர் மாவட்டத்தில் ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர், வத்திராயிருப்பு பகுதிகளில் 29 கூட்டுறவு சங்கங்கள் மூலம் 4000 பெடல் தறிகள் இயங்கி வருகின்றன. சுமார் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இத்தொழிலை நம்பி வாழ்ந்து வருகின்றனர். தவெக அரசு இந்த ஆண்டு புதிய ரக சேலைகள் வழங்கப்படும் என்று அறிவித்தது. ஏற்கனவே, உற்பத்தி செய்த ஜனதா ரக சேலைகளுக்கு நிர்ணயிக்கப்பட்ட விலை ரூ. 103.80. தற்போது புதிய ரகத்திற்கு நிர்ணயம் செய்த கூலி ரூ. 114.80 ஆகும். ஒரு தொழிலாளி ஒரு நாளைக்கு 2 சேலைகள் மட்டுமே நெசவு செய்ய வாய்ப்புள்ளது என விசைத்தறி நெசவாளர்கள் கூறி வருகின்றனர்.

இதனால் பல்லாயிரக்கணக்கான விசைத்தறி தொழிலாளர்கள் வாழ்வாதாரம் இழந்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். புதிய
ரக சேலைக்கு கூலி உயர்வு வழங்கிட கோரி பெடல் தறி நெசவாளர்கள் கைத்தறி துறை அமைச்சர், அரசின் உயர் அதிகாரிகளை சந்தித்து
முறையிட்டும் எவ்வித பயனும் இல்லாததால் 50 நாட்களுக்கும் மேலாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். ஆனால், நெசவாளர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கு தமிழக அரசு எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளாமல் இதுவரை வேடிக்கைப் பார்த்து வருவது வன்மையான கண்டனத்திற்குரியது.

எனவே, பெடல் தறி நெசவாளர்களின் முக்கிய கோரிக்கைகளான புதிய ரக சேலை ஒன்றுக்கு ரூ. 250 கூலி வழங்க வேண்டும், புதிய ரக மாற்றத்திற்கு உபகரணங்கள் மற்றும் செலவினங்களுக்கு ரூ. 10 ஆயிரம் வழங்கிட வேண்டும், வேலையில்லா காலத்திற்கு மாதம் ரூ. 10 ஆயிரம் நிவாரணம் வழங்கிட வேண்டும், கொள்முதல் செய்யப்படாமல் உள்ள பழைய ரக சேலைகளை கொள்முதல் செய்திட வேண்டும், புதிய ரகத்தினால் பழைய ரகத்தில் பணி செய்த பசை போடுபவர்கள், நூல் சுற்றுபவர்கள், பாவோடிகளுக்கு வேலை இழப்பு ஏற்படுகிறது. அவர்களுக்கு மாற்று ரகம் வழங்கி பணிகள் வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்ற வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ராஜபாளையத்தில் காத்திருப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.

பெடல் தறி நெசவாளர்களின் நியாயமான கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெறும் இந்த போராட்டத்திற்கு அனைத்து தரப்பு பொதுமக்களும், ஜனநாயக இயக்கங்களும் பேராதரவு அளிக்க வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கேட்டுக் கொள்கிறது.
மேலும், பொங்கல் பண்டிகை நெருங்கி வருவதால் போராடும் பெடல் தறி நெசவாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றிடவும், பொதுமக்களுக்கு எவ்வித தங்கு தடையுமின்றி இலவச வேஷ்டி, சேலை உரிய காலத்தில் வழங்கிடவும் தமிழக அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது.

NEWSLETTER & ALERTS

முக்கியச் செய்திகள் — உங்கள் கைபேசிக்கே

தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.

Scroll to Top