Times of Puducherry
தொழில் தொடங்க வேண்டும் என்ற கனவு பலருக்கும் இருக்கும். ஆனால், மூலதனம் எங்கே கிடைக்கும்?, வங்கிக் கடன் கிடைக்குமா?, இயந்திரங்கள் வாங்க அரசு மானியம் உள்ளதா?, தயாரித்த பொருளை எங்கே விற்பது? போன்ற கேள்விகளுக்கே விடை தெரியாமல் பலர் தயங்கி நிற்பார்கள்.
தொழில்முனைவோரின் இந்தத் தேடலை எளிதாக்கும் வகையில், 50-க்கும் மேற்பட்ட MSME மற்றும் ஸ்டார்ட்-அப் (Start-up) அரசுத் திட்டங்களின் சிறப்புத் தொகுப்பு ஒன்றை டெல்லி அரசு வெளியிட்டுள்ளது. ‘உதயம் சம்வாத் 2026’ நிகழ்ச்சியில் வெளியிடப்பட்ட இந்தத் தொகுப்பில், மத்திய மற்றும் மாநில அரசுகளின் பல்வேறு நிதியுதவி, தொழில்நுட்பம் மற்றும் சந்தை வாய்ப்புத் திட்டங்கள் அடங்கியுள்ளன.
புதிய தொழில் தொடங்க நிதியுதவி (PMEGP)
புதிதாகத் தொழில் தொடங்குபவர்களுக்கு பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம் (PMEGP) ஒரு மிகச் சிறந்த வாய்ப்பாகும்.
கடன் மானியம்: இது வங்கியுடன் இணைந்த மானியத் திட்டமாகும் (Credit-linked Subsidy Scheme).
வரம்பு: உற்பத்தித் துறைக்கு அதிகபட்சமாக ரூ. 50 லட்சம் வரையிலும், சேவைத் துறைக்கு ரூ. 20 லட்சம் வரையிலும் திட்ட மதிப்பீடாக அனுமதிக்கப்படுகிறது. இது அரசு வழங்கும் இலவசப் பணம் அல்ல; வங்கியிலிருந்து பெறும் கடனுக்கு அரசு வழங்கும் மானிய உதவியாகும்.
பிணையம் (Collateral) இல்லாமல் வங்கிக் கடன் (CGTMSE)
சிறு தொழில்முனைவோருக்கு மிகப்பெரிய சவாலே சொத்து பிணையம் இல்லாமல் கடன் பெறுவதுதான்.
க்ரெடிட் கியாரண்டி ஸ்கீம் (CGTMSE): தகுதியான குறு மற்றும் சிறு நிறுவனங்கள் வங்கிக் கடன் பெறும்போது, அரசாங்கமே அதற்கான கடன் உத்தரவாதத்தை (Credit Guarantee) வழங்குகிறது. இதன் மூலம் பிணையம் எதுவும் காட்டாமல் வங்கிக் கடன்களை எளிதாக அணுக முடியும்.
தொழில்நுட்பம் மற்றும் இயந்திரங்களை மேம்படுத்த (ZED / LEAN / RAMP)
பழைய தொழில் நுட்பங்களையோ, இயந்திரங்களையோ மாற்றித் தொழிலை அடுத்த கட்டத்திற்குக் கொண்டு செல்ல விரும்புபவர்களுக்குச் சிறப்புத் திட்டங்கள் உள்ளன.
தொழில்நுட்ப மேம்பாட்டு மானியம்: தகுதியுள்ள நிறுவனங்கள் புதிய இயந்திரங்களை வாங்க 15% வரை (அதிகபட்சமாக ரூ. 15 லட்சம்) முன்பண மானியம் பெற வழியுள்ளது.
MSME Champions, ZED, LEAN: தயாரிப்புகளின் தரத்தை உயர்த்தவும், சர்வதேசத் தரச் சான்றிதழ்களைப் பெறவும், உற்பத்திக் கழிவுகளைக் குறைத்து லாபத்தைப் பெருக்கவும் இத்திட்டங்கள் பயன்படுகின்றன.
பொருளைச் சந்தைப்படுத்தவும் இ-காமர்ஸில் விற்கவும் (MSME TEAM)
பொருளைத் தயாரித்த பிறகு வாடிக்கையாளர்களைச் சென்றடைவதற்கும் அரசு வழிவகை செய்கிறது.
MSME TEAM திட்டம்: சிறு தொழில்களை அமேசான், ஃபிளிப்கார்ட் போன்ற இ- காமர்ஸ் தளங்களில் இணைத்து ஆன்லைனில் பொருட்களைப் பட்டியலிடவும், விற்பனை செய்யவும் உதவுகிறது.
சர்வதேச ஒத்துழைப்புத் திட்டம் (IC Scheme)
ஏற்றுமதி செய்ய விரும்புபவர்களுக்கு வெளிநாட்டுச் சந்தை நிலவரங்கள், கண்காட்சிகள் மற்றும் சுதந்திர வர்த்தக ஒப்பந்தங்கள் (FTA) பற்றிய தகவல்களையும், வழிகாட்டுதலையும் அளிக்கிறது.
வாடிக்கையாளரிடம் சிக்கிய நிலுவைத் தொகையைப் பெற (MSME ODR)
பொருளை விற்ற பிறகும் வாடிக்கையாளர்கள் அல்லது பெரிய நிறுவனங்கள் பணத்தைத் தராமல் இழுத்தடிப்பது சிறு தொழில்களின் பெரிய பலவீனம். MSME ODR / Samadhaan ஆகியவை தாமதமான பணப்பரிவர்த்தனைப் புகார்களை ஆன்லைன் மூலமாக விரைவாகத் தீர்த்து வைக்க இந்த தளம் உதவுகிறது.
மேலும் RAMP திட்டத்தின் கீழ் பசுமைத் தொழில் முதலீடுகளுக்கு MSE-GIFT, உள்கட்டமைப்பிற்கு MSE-SPICE போன்ற பல்வேறு துணைத் திட்டங்களும் செயல்பட்டு வருகின்றன. அரசுத் திட்டங்கள் அறிவிக்கப்பட்டுவிட்டன என்பதற்காகவே உடனடியாகப் பணம் கைக்கு வந்துவிடாது. ஒவ்வொரு திட்டத்திற்கும் தனித்தனியான தகுதிகள், பதிவு நடைமுறைகள் மற்றும் மாநில வரம்புகள் இருக்கும். எனவே, உங்கள் தொழிலுக்கு ஏற்ற திட்டத்தைத் துல்லியமாகத் தேர்ந்தெடுத்து, உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிப்பதே வெற்றிக்கான வழி ஆகும்.
தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.